மத் 8:10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/yNigc3Ma2Nw
நூற்றுக்கு அதிபதி ஒருவன் இயேசுவிடம் வந்து அவனுடைய வேலைக்காரன் திர்வாதக்காரனாய் இருந்து கொடிய வேதனைபடுகிறான் என்று அறிவித்தான். நம்முடைய வேதனைகள் எதுவாக இருந்தாலும் அதை இயேசுவிடம் தெரிவிக்கவேண்டும். இயேசுவுக்கு நாம் கடந்து செல்கிற பாதைகள் அனைத்தும் நன்றாக தெரிந்திருந்தாலும், நாம் அதை அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நம்முடைய எல்லா தேவைகளையும் ஸ்தோத்திரத்தோடு அவருக்கு விண்ணப்பங்களில் தெரியப்படுத்த வேண்டும். இயேசு நூற்றுக்கதிபதிக்கு பிரதியுத்திரமாக நான் வந்து அவனை சொஸ்தமாக்குகிறேன் என்று பதிலளித்தார். அதற்கு நூற்றுக்கதிபதி சொன்னான் ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்பதாக. நூற்றுக்கதிபதிக்குள்ளாக விசுவாசம் மற்றும் தாழ்மை, இவைகளிரண்டு நல்ல குணாதிசியங்கள் இருப்பதை இயேசு பார்த்தார். நாமும் எப்பொழுதும் விசுவாசம் மற்றும் தாழ்மையுள்ள பாத்திரவான்களாக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அப்பொழுது இயேசு அவனுக்குள்ளாக இருந்த நல்ல குணாதிசியங்களை பார்த்து அப்படியே கடந்து செல்லாமல், அவருக்கு பின்னாக வரும் கூட்டத்தை பார்த்து இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி நூற்றுக்கு அதிபதியை பாராட்டினார்.
ஒருமுறை இயேசு தன்னுடைய சீஷர்களை பார்த்து ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்தார். அப்பொழுது பேதுரு மாத்திரம் சொன்னான் நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று. அதற்கு இயேசு அவனை பார்த்து நீ பாக்கியவான் என்று சொல்லி அவனை முதலாவது பாராட்டினார்.
பிலிப்பு அழைத்தினிமித்தம் நாத்தான்வேல் இயேசுவிடம் நன்மை உண்டாகுமா என்று அறிய வாஞ்சையோடும் விசுவாசத்தோடும் கடந்து வந்தான். அவனை கண்ட இயேசு சொன்னார் இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று.
இப்படியாக இயேசு நல்ல குணாதிசியங்கள் இருப்பவர்களை கண்டு பாராட்டுகிற நல்ல ஆண்டவராக இருந்தார். அநேக இடங்களில் நம்மை பாராட்டுவதற்கு பதிலாக ஜனங்கள் இடித்து தள்ள தான் எத்தனிக்கிறார்கள். பாராட்டுவதற்கு மறந்துவிடுகிற ஜனங்களும் இருக்கிறார்கள். ஆனால் இயேசு உங்கள் ஒவ்வொருவரையும் உள்ளங்கையில் வரைந்திருக்கிறார். உங்களுக்குள்ளிருக்கும் விசுவாசம், தாழ்மை, வெளிப்படைத்தன்மை போன்ற நல்ல பண்புகளை பார்த்து இயேசு உங்களை பாராட்டுவார்.
இயேசு ஒருவனை பார்த்து தனிமையாக பாராட்டினாலே அது மிகவும் கனம் நிறைந்தது. ஆனால் நூற்றுக்கதிபதியை மற்ற ஜனங்களுக்கு முன்பாக நிறுத்தி எல்லாருக்கும் முன்பாக பாராட்டினார் என்றால் அது எவ்வளவு பெரிய கனமாய் இருந்திருக்கும். உங்களையும் இயேசு அப்படியே பாராட்டுவார். நாள் வரும்; அப்பொழுது உங்களை இயேசு பிதாவின் முன்பாக கனப்படுத்துவார், பாராட்டுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org