தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது, லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது (2 கொரி. 7:10).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/iBOcY0ZLCuU
இரண்டு விதமான துக்கங்கள் காணப்படுகிறது, ஒன்று தேவனுக்கேற்ற துக்கம், மற்றொன்று லௌகிக துக்கம். தேவனுக்கேற்ற துக்கமானது பாவத்தைக் குறித்து உணர்த்தப்படும் போது, அதினிமித்தம் இருதயத்தில் குத்துண்டு, மனந்திரும்புதலைக் கொண்டுவரும். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு மற்ற பதினொரு சீஷர்களோடும் எழும்பி நின்று நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதுபோல நாத்தான் தீர்க்கதரிசி தாவீது, உரியாவின் மனைவியாகிய பத்சேபாளோடு செய்த பாவத்தை உணர்த்தின வேளையில், தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன் என்று மனம் வருந்தி அறிக்கையிட்டான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுக்கேற்ற துக்கம் உங்களுக்குள் வந்ததுண்டா? பாவத்தையும், நீதியையும், நியாயத்தீர்ப்பையும் குறித்து ஆவியானவர் உங்களைக் கண்டித்து உணர்த்துகிற வேளையில், அவற்றையெல்லாம் அறிக்கையிட்டு விட்டுவிட்டீர்களா? கொரிந்து சபை விசுவாசிகளுக்குள் அப்படிப்பட்ட துக்கம் காணப்பட்டது. பலவிதமான பாவப் பழக்கவழக்கங்கள் அவர்களுக்குள் காணப்பட்டது. ஆனால் பவுலின் செய்தி, நிருபங்களின் மூலம் கிடைத்தபொழுது, அது அவர்களுக்குள் தேவனுக்கேற்ற துக்கத்தைக் கொண்டுவந்தது, மனம் திரும்புதலைக் கொண்டு வந்தது. அதைக் கண்டு பவுல் சந்தோஷப்பட்டான். நாமும் மனந்திரும்பி, அதற்கேற்ற கனிகளைக் கொடுக்கும்; போது ஆண்டவருடைய இருதயம் சந்தோஷப்படும், தெய்வீக சமாதானமும் சந்தோஷமும் நம் இருதயத்தை நிரப்பும்.
லௌகிக துக்கம் என்பது செய்வது தவறு என்று அறிந்திருந்தும், குற்றவுணர்வு காணப்பட்டிருந்தும், அவற்றை விட்டுவிடாதபடி, மனந்திரும்பாதபடிக்கு, தொடர்ந்து பாவத்தில் காணப்படுவதாகும். யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு ஆண்டவரைக் காட்டிக் கொடுத்தான், பின்பு அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து, குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். செய்த தவற்றுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. என்னை மன்னியும் என்று ஒரு சிறிய ஜெபத்தை ஏற்றெடுத்திருப்பானென்றால் கர்த்தர் அவனை மன்னித்திருப்பார். லௌகிக துக்கம் மரணத்தை உண்டாக்குகிறது என்று வேதம் எச்சரிக்கிறது. பாவம் மன்னிக்கப்படாவிட்டால், அதின் சம்பளம் மரணமாய் காணப்படுகிறது. ஆகையால் மீறுதல்களையும் பாவங்களையும் ஒருநாளும் மூடிமறைக்க முயலாமல் அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடுங்கள். அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar