யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தினான் (எரேமியா. 52:31).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/xjqAGOtaw9o
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீன் மூன்று மாதங்களும் பத்து நாட்களும் யூதாவின் மேல் ராஜாவாக ஆட்சிசெய்தான். அந்த குறைந்த அரசாட்சியின் நாட்களிலும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். ஆகையால் கர்த்தர் அவனை நேபுகாத்நேச்சாரிடத்தில் விற்றுப்போட்டார், அவன் யோயாக்கீனுக்கு விரோதமாக வந்து அவனை பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டு போனான். அங்கே முப்பத்தேழு வருஷம் கைதியாக சிறைச்சாலையில் காணப்பட்டான். மூன்று மாதங்கள் ஆட்சி, ஆனால் முப்பத்தேழு வருஷம் அடிமைத்தனம். யோயாக்கீனுடைய இன்னொரு பெயர் கோனியா என்பதாகும். அவனைக்குறித்து யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா, என் வலது கையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொன்னார்(எரே. 22:24). யூதா கோத்திரம் கர்த்தருக்குப் பிரியமான கோத்திரமாயிருநதும், தாவீதின் வம்சத்தில் சிங்காசனத்தில் அமரும் படிக்கு ஒருவன் எப்போதும் காணப்படுவான் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்திருந்தும், அவர்களை முத்திரை மோதிரமாய் கனத்திற்குரிய பாத்திரங்களாய் வைப்பேன் என்று வாக்கு கொடுத்திருந்தும், அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய் பாவங்கள் செய்த வேளையில், அதை விசாரித்துத் தண்டிக்கிறவராய் கர்த்தர் காணப்பட்டார். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் நமக்குப் பாராட்டியிருக்கிற ஈவுகளையும், நன்மைகளையும் அற்பமாய் கருதி, அவர் நம்மை முன்குறித்து தெரிந்தெடுத்த மேன்மையை மறந்து, அவருடைய எச்சரிப்பின் சத்தத்தை அசட்டைச் செய்து, அவருக்கு விரோதமாய் துணிந்து பாவம் செய்யாதிருங்கள்.
நேபுகாத்நேச்சாருடைய மரணத்திற்குப் பின்பு அவன் குமாரன் ஏவில் மெரொதாக் பாபிலோனிய ராஜாவாக வந்தான். அவனுடைய கண்களில் கர்த்தர் யோயாக்கீனுக்கு தயவைக் கட்டளையிட்டார். நம்பிக்கையில்லாத சூழ்நிலையில் அவனுக்குக் கர்த்தர் புது நம்பிக்கையையும், தயவைக் கட்டளையிட்டார். அவன் யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி, அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாகவைத்து, அவனுடைய சிறையிருப்பின் வஸ்திரங்களை மாற்றினான், அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படிக்கும், அவனுடைய செலவுக்கான பணமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது. வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறைச்சாலையில் கழித்த யோயாக்கீனுக்கு பெரிய தயவைக் கர்த்தர் கட்டளையிட்டதைப் பார்க்கமுடிகிறது. நம்முடைய கர்த்தர் பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணத்தையும், பலவானிடத்திலிருந்து மதுரத்தையும் தருகிறவர். உங்களை அழிக்கும் படிக்கு நினைக்கிறவர்கள் கண்களிலிருந்து உங்களுக்குத் தயவைக் கட்டளையிடுவார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, பலவிதமான பாடுகளின் பாதையில் கடந்து செல்லுகிறீர்களோ? பல வருடங்களாய் காணப்படுகிற இந்தப் பிரச்சனையிலிருந்து யார் தான் என்னை விடுவிப்பார் என்று கலங்கிப் போய் நிற்கிறீர்களோ? இனி நம்புவதற்கு ஏதும் இல்லையே என்ற நிலையில் காணப்படுகிறீர்களோ? கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்து உங்களை விடுவிப்பார். நம்முடைய தேவன் சூழ்நிலைகளுக்கு மேலானானாவர். அவர் மனுஷனுடைய இருதயங்களை நீர்க்கால்களைப் போலத் திருப்புகிறவர். உங்களுக்கு தயவைக் கட்டளையிட அவர் வல்லமையுள்ளவர், ஆகையால் கலங்கிப் போகாதிருங்கள். கர்த்தர் உங்களை விடுவித்து, உயர்த்தி மகிழப்பண்ணும் நாட்கள் துரிதமாய் வருகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar