என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் (லேவி 20:8).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/yeGQMVuOhvQ
நான் பரிசுத்தர் என்று சொன்னது மாத்திரமல்ல, நான் உங்களை பரிசுத்தமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒரு முறை இயேசு திடீரென்று சீஷர்களின் கால்களை கழுவ தொடங்கினார். அதற்கு பேதுரு: இயேசுவே, நீர் என் கால்களை கழுவலாகாது என்று தடுத்தான். இயேசு சொன்னார் நான் உன்னை கழுவவில்லை என்றால் என்னிடத்தில் உனக்கு பங்கில்லை என்பதாக. பின்பு பேதுரு சொன்னான், ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்பதாக. உடலில் இருக்கும் கறைகளை, ஆடையிலிருக்கும் கறைகளை சோப் போட்டு கழுவி சுத்திகரித்துவிடலாம். ஆனால் உள்ளார்ந்த மனிதன் கறைபட்டிருப்பானென்றால், அவனை கழுவி சுத்திகரிக்க வெறும் தண்ணீரோ, சோப்போ போதாது. அவைகளை கழுவ பரிசுத்த இரத்தம் தேவைப்பட்டது. பரிசுத்த இரத்தத்தை உங்களுக்காக எனக்காக இயேசு கல்வாரி சிலுவையில் முழுவதுமாக ஊற்றி கொடுத்தார்.
ஒரு தெருவில் ஒரு பிச்சைக்காரன் அனாதையாக அநேக வருடங்கள் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனை பார்க்கும்போது அவனுடைய முடி அநேக வருடங்கள் வெட்டாமல் மிகவும் நீண்டதாக இருந்தது; அந்த முடி மிகவும் சிக்கலாக பின்னி பிணைந்து காணப்பட்டது. ஒரே ஆடையில் பலவருடங்கள் இருந்ததால், அவைகள் இங்கும் அங்குமாக கிழிந்து மிகவும் அழுக்காக இருந்தது. அநேக வருடங்கள் வெட்டப்படாத கை நகங்கள், கால் நகங்கள், கறைபிடித்த பற்கள் இப்படியாக மிகவும் அலங்கோலமாக காட்சியளித்தான். அவனுடைய உடலில் இருந்து தாங்கிக்கொள்ள முடியாத துர்நாற்றம் வந்தது. அவன் பல வருடங்கள் அதே தெருவில் இருந்தான்; இருந்தாலும் அவனை சுத்தம் செய்வதற்கோ, உதவி செய்வதற்கோ ஒருவரும் முன்வரவில்லை. இச்சூழ்நிலையில் ஒரு தேவமனிதன் அவனை கண்டு, மனுதுருகி, அவனை சுத்தம் செய்ய அவனை தன்னிடத்திற்கு அழைத்து கொண்டு சென்றான். அவன் தலையிலுள்ள முடியை சரியாக கத்தரித்து, நகங்கள் எல்லாம் சரி செய்து, குளிப்பாட்டி, நல்ல ஆடைகளை உடுத்துவித்தான். இப்பொழுது அந்த பிச்சைக்காரன் ஒரு புது மனிதனை போல காட்சியளித்தார்.
இப்படித்தான், நம்முடைய உள்ளான மனிதன் மிகவும் துர்நாற்றம் வீசுபவனாக காணப்பட்டான்; இன்னும் அநேகருக்கு அப்படியே பாவத்தில் ஜீவித்து துர்நாற்றம் வீசிக்கொண்டு காணப்படுகிறது. அவற்றை சுத்தம் செய்ய இந்த உலகத்தில் ஒருவரும் முயற்சித்தது கிடையாது; யாராலும் முயற்சி செய்யவும் முடியாது. இப்படியிருக்கு ஆண்டவர் சொல்லுகிறார், நான் உங்களை பரிசுத்தமாக்குவேன். உங்களிலுள்ள பாவ கறைகள் சிவேரென்றிருந்தாலும் அவற்றை நான் கழுவுவேன். நானே உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று இயேசு சொல்லுகிறார். யெகோவா மேக்காடேசம் என்பதற்கு நானே உங்களை பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று அர்த்தம். உங்களை நீதியின் பாதையில் நடுத்துகிற (சங் 23:3) நல்ல கர்த்தராய் நம் இயேசு காணப்படுகிறார். அவர் நம்மை பரிசுத்தமாக்கும்படி, இயேசுவிடம் மன்றாடுவோம்; அப்பொழுது நம்முடைய குறைவுகளை நீக்கி, பாவக்கறைகளை அகற்றி நம்மை பரிசுத்தமாய் வாழும்படி செய்வார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org