வெளி 22:21 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/Twnn-iSLDsE
வேதாகமத்தில் எண்ணற்ற வாக்குத்தத்தங்களும், ஆசிர்வாதங்களும் எழுதப்பட்டிருக்கிறது. வேதகமத்திலிருக்கும் பழைய ஏற்பாட்டின் கடைசி வசனம் சாபத்தோடு, நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு (மல்கி 4:6) என்று முடிவடைகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டின் ஆரம்பம் இயேசுவின் பிறப்பு, இரட்சிப்பில் ஆரம்பித்து, முடியும்போது ஆசீர்வாதம் வாழ்த்துதலோடு முடிவுபெற்றிருப்பது நமக்கு கிடைத்த சிலாக்கியம். நம்முடைய பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு கிடைக்காத சிலாக்கியதை கிறிஸ்து நமக்காக சிலுவையில் சம்பாரித்து கொடுத்திருக்கிறார். நாம் இந்த உலகில் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ கிருபை இன்றியமையாதது. நாம் யாவரும் கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறோம்; ஆகையால் பாவம் நம்மை மேற்கொள்ளாது. பாவத்தின் சம்பளம் மரணம். ஆகையால் அந்த பாவத்தை மேற்கொள்ள இயேசு நமக்கு அளவற்ற கிருபையை கொடுத்திருக்கிறார். மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது (ரோம 5:15) என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் கிருபை நம்மை அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து விடுதலையாக்குகிறது. இனி நாம் ஒருநாளும் இச்சைகளுக்கு, வேசித்தனம், விபச்சாரம், குடிவெறி, பொய், விக்கிரகராதனை, இறுமாப்பு போன்ற எவ்வித பாவத்திற்கும் அடிமையாவதில்லை.
தேவனுடைய அளவற்ற கிருபை நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ளது (ரோம 3:24). சீமோன் என்று சொல்லக்கூடிய மாயவித்தைக்காரன் ஆவிக்குரிய வரங்களை பணத்தினால் சம்பாதிக்கலாம் என்று துர்சிந்தை கொண்டான். ஆண்டவர் கொடுக்கும் பரிசுகளை நாம் பணம்கொடுத்து ஒருக்காலும் வாங்கமுடியாது. எல்லாருக்கும் கர்த்தர் கிருபைகளை வரங்களை இலவசமாக கொடுக்கிறார். இலவசமாக பெற்றுக்கொண்ட கிருபையை தக்கவைத்துக்கொள்வதும், அதை பெருக்கிக்கொள்வதும் நம்முடைய கரங்களில் தான் காணப்படுகிறது. காரணம் வசனம் சொல்கிறது நாம் ஸ்தோத்திரம் செலுத்தும்போதும், தாழ்மையாய் இருக்கும்போதும் கர்த்தர் நமக்கு கிருபையை பெருகப்பண்ணுகிறார் என்று.
அப்போஸ்தலனாகிய பேதுரு தன் நிருபத்தை எழுதி முடிக்கும்போது கிருபை உங்களோடிருக்கும் என்று எழுதி முடிக்கிறான். அப்போஸ்தலனாகிய பவுலும் கூட தன்னுடைய நிருபங்களில் அநேக இடங்களில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக என்று ஆசீர்வாத வாழ்த்துதலோடு முடித்திருப்பதை நாம் வேதத்தை வாசிக்கும்போது அறிந்துகொள்கிறோம். அதுபோல, தன் வயது முதிர்ந்த காலத்தில் அப்போஸ்தலனாகிய யோவானும் வேதாகமத்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதி முடிக்கும்போது ஆசீர்வாத வாழ்த்துதலோடு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக என்று முடித்திருப்பது நம்மை இன்னும் உற்சாகப்படுத்துகிறதாய் பரவசப்படுத்துகிறதாய் காணப்படுகிறது. உலகத்தின் முடிவுமட்டும் வாழ்ந்து முடிக்க எப்படி சுவாசம் இன்றியமையாததாய் காணப்படுகிறதோ, அதுபோல நாம் கடைசிமட்டும் இந்த உலகத்தில் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ இயேசு கிறிஸ்துவின் கிருபை இன்றியமையாததாய் காணப்படுகிறது.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org