சங் 110:3. உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kGf-G_ap1mE
மீதியானியர்கள் வெட்டுக்கிளியைப்போல இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்துவந்தபோது கிதியோன் வெறும் முன்னூறு பேருடன் சென்று மீதியானிய சேனைகளை முறியடித்தான். அதேபோல, யேசபேல் கர்த்தருடைய ஜனங்களுக்கு, தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக செயல்பட்டபோது யெகூ என்னும் ஒருவன், யேசபேல் என்னும் இராட்சசியை கொன்றுபோட்டான். இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டு வேசித்தனம் பண்ணினான். அப்பொழுது பினெகாஸ் என்னும் வாலிபன் பரிசுத்த வைராக்கியம் கொண்டு இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தை செய்த அந்த இஸ்ரவேல் மனிதனையும் ஸ்திரீயையும் ஈட்டியினால் குத்தி கொன்றுபோட்டான். இப்படிப்பட்ட வாலிபர்கள், இளம் வீரர்கள் இந்நாட்களில் சபையில் எழும்பவேண்டும்.
சபைக்கு விரோதமாக பல்வேறு அசுத்த, பொல்லாத ஆவிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சபையை முடக்க, அழிக்க முழு பாதாளமும் கைகோர்த்து நின்றுகொண்டிருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. ஒருபக்கம் வெளிப்படையாக சத்துரு சபைகளை இடித்து அழிக்க பார்க்கிறான். அதேவேளையில் மறைமுகமாக சத்துரு இளம் வாலிபர்களுக்கு பகட்டான காரியங்களை காண்பித்து, இச்சைகளை தூண்டிவிடும் காரியங்களில் விழும்படியாக செய்து அவர்களை வீழ்த்தி கொண்டுவருவதை நாம் பார்க்கமுடிகிறது.
தேசங்களில் பார்த்தால் எங்கு பார்த்தாலும் விக்கிரகம், வேசித்தனம், குடிவெறி, சினிமா மோகம் போன்றவற்றை காண்பித்து ஜனங்கள் சீரழியும்படி சத்துரு செய்துகொண்டிருக்கிறான். இந்திய தேசத்தில் மாத்திரம் கிறிஸ்துவை அறியாத இனங்கள் மாத்திரம் இன்னும் அநேகம் உண்டு. ஆகையால் தான் இயேசு சொன்னார் நீங்கள் புறப்பட்டு போங்கள் என்று. இன்று கிறிஸ்துவுக்காய் செயல்படுகிற இளம் வீரர்கள், யௌவன ஜனம் எழும்ப வேண்டும். தேசத்தில் கிரியை செய்யும் எல்லா பொல்லாத கிரியைகளையும், சடங்காச்சாரங்களையும் அழிக்கும் கிதியோன்கள், யெகூக்கள், பினெகாஸ்கள் எழும்ப வேண்டும்.
இன்றைய இளம் வீரர்கள் வனாந்திரத்தில் கற்கவேண்டிய பாடங்கள், இயேசுவோடு தனிமையில் இருக்கும் நேரம் போன்றவற்றை தவற விட கூடாது. வனாந்திர வாழ்வு என்னும் அடித்தளத்தில் இருந்து தான் தேவன் மகிமையான ஊழியங்களை எழுப்பினார். மோசேயை ஆண்டவர் வனாந்திரத்தில் சந்தித்தார். இயேசுவின் ஊழியம் வனாந்திரத்திற்கு பின்பு தொடங்கப்பட்டது. பவுல் வனாந்திரத்தில் சந்திக்கப்பட்டான். ஆகையால் இளம் வாலிபர்கள் இயேசுவுக்காக சுமக்கும் நுகங்ளை குறித்து கவலைப்படாமல் சந்தோசத்தோடு மகிமையான அழைப்பை ஏற்று, செயல்படுத்த, தீவிரம் காண்பிக்க வேண்டும். தாவீதை பார்த்து இவன் இளைஞன் என்று சொன்னார்கள்; அவன் தான் பெரிய பெலிஸ்தியனாகிய கோலியாத்தை வீழ்த்தி, சவுல் இராஜாவுக்கு முன்பாக வந்து நின்றான். தேவன் தன்னுடைய அசாதாரணமான வல்லமையை இளம் வீரர்கள் மூலம் செயல்படுத்த துடிக்கிறார் என்பது தாவீதின் சம்பவம் நமக்கு ஒரு எடுத்துக்காட்டாய் காணப்படுகிறது.
கிறிஸ்துவின் யௌவன ஜனமே, இளம் வீரர்களே, தேவன் உங்களை அழைத்ததற்கு முகாந்திரம் உண்டு. இது செயல்படும் நாள். வேண்டாத சம்பாஷணைகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு பல மணிநேரங்கள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, தேசம் சந்திக்கப்பட உங்கள் கண்ணீரை இயேசுவின் பாதத்தில் சிந்தும் நாட்கள். ஆத்தும ஆதாயம், சுவிசேஷப்பணி, மிஷினரி பணி என்று உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். திருச்சபைகள் கட்டப்பட, ஆத்துமாக்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை கண்டுகொள்ள யௌவன ஜனமாகிய நீங்கள் செயல்படுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கனப்படுத்தி ஆசிர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org