…..நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான் (2 நாளா. 19:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-MnaKM2k9WI
யோசபாத் என்ற யூதாவின் ராஜா ஒவ்வொரு பட்டணத்திலும் நியாதிபதிகளை நியமித்து அவர்களிடம் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் ஜனங்களை நியாயம் விசாரியுங்கள், அப்படி நீங்கள் செய்யும் போது, உங்கள் உத்தம செய்கையைக் கண்டு கர்த்தர் உங்களுக்குத் துணைநிற்பார் என்றான். இந்நாட்களில் நியாய ஸ்தலங்களில் அநியாயம் காண்படுகிறது. சட்டத்தின்படி நீதியும் நியாயமும் செய்யவேண்டியவர்கள் அதற்கு எதிராக செயல்படுவதை உலகம் முழுவதும் பார்க்கமுடிகிறது. ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் தேவனுக்குப் பயந்து, உத்தமமாய் காரியங்களை நடப்பிக்கும் போது அவர் உங்களுக்குத் துணை நிற்பார். பயப்படாதே நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று வாக்குக் கொடுத்தவர் உங்கள் வாழ்நாட்களெல்லாம் உங்களுக்குத் துணைநின்று நடத்துவார்.
நோவா தன் காலத்திலிருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது, அவன் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஆகையால் முழு உலகமும் வெள்ளத்தினால் அழிந்தபொழுதும், உத்தமனாய் வாழ்ந்த நோவாவையும் அவன் குடும்பத்தையும் கர்த்தர் காப்பாற்றினார். ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு என்றார். ஆபிராம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவருக்கு முன்பாக உத்தமமாய் ஜீவித்தான். ஆகையால் கர்த்தர் அவனுடைய தேவைகளைச் சந்தித்து, வாக்குத்தத்தத்தின் சந்ததியைக் கொடுத்து, யுத்தத்தில் அவனுக்குத் துணைநின்று, அவனை ஆசீர்வதித்து உயர்த்தினார். காலேப்பைக் குறித்து கர்த்தர் கூறும் போது, என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிற படியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்த படியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன், அவன் சந்ததியர் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று வாக்குக் கொடுத்தார், அப்படியே கர்த்தர் அவனுக்குக் கானானை சுதந்தரிக்கும்பபாக்கியத்தைக் கொடுத்தார். எஸ்றா, கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தைப் உத்தமமாய் போதித்த வேதபாரகனாய் காணப்பட்டான். அவன் கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான், ஆகையால் கர்த்தர் அவனுக்கு எல்லா விதங்களிலும் துணைநின்று ராஜாவின் கண்களில் தயையைக் கட்டளையிட்டார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் ஏன் உங்களிடத்தில் உத்தமத்தை எதிர்பார்க்கிறார்? அவர் உத்தமமானவர், அவருடைய வழிகள் உத்தமமானது, அவருடைய செய்கைகள் உத்தமமானது. மோசே அவரைக் குறித்துக் கூறும்போது, அவர் கன்மலை, அவர் கிரியை உத்தமமானது, அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன், அவர் நீதியும் செம்மையுமானவர் என்றான் (உபா. 32:4). ஆனால் அவருடைய பிள்ளைகள் என்று சொல்லுகிறவர்களிடத்தில் இந்நாட்களில் அவருடைய சுபாவங்களைப் பார்க்கமுடியவில்லை. கோணல்களும், தாறுமாறுகளும் அனேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் காணப்படுகிறது. இப்பிரபஞ்சத்தின் ஜனங்களைப் போல காணப்படுகிறார்கள். ஊழியர்களிடத்திலும் உண்மையும் உத்தமமும் இல்லை, பணக்காரியங்களில் உத்தமம் இல்லை. ஆனால் உத்தமமாய் வாழ்வதற்கு அர்ப்பணித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கேடகமாயிருப்பார், உங்களுக்கு நன்மைகளை வழங்கி, ஒவ்வொரு நாளும் துணைநிற்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar