இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள் (யாத்திராகமம் 16:35).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oiqakU_wTQc
ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் நடந்துவந்தபோது, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களுக்கு கிடைத்த மன்னா தேனிட்ட பனியாரம்போல சுவையாக இருந்தது. நாற்பது வருடங்கள் ஒவ்வொருநாளும் சாப்பிடுவதற்கு தேவையான மன்னாவை கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். சங்கீதக்காரன் சொல்லுகிறான் உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும் (சங் 119:103) என்று. அதுபோல இன்றும் கர்த்தர் ஒவ்வொருநாளும் வேதவசனம் என்னும் மன்னாவை கர்த்தருடைய ஜனங்களுக்கு கொடுக்க பிரியமாயிருக்கிறார்.
ஒவ்வொருநாளும் வேதாகமத்தை ஆர்வமுடன் கர்த்தருடைய ஜனங்கள் வாசிக்கவேண்டும். எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள். முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது. ஜனங்கள் எல்லாரும் ஆர்வமுடன் வசனம் என்னும் மன்னாவை உட்கொண்டார்கள். யோசுவாவும் கூட இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான். அந்த பிரமாணத்தில் அநேக சாபங்களும் இருந்தது, அநேக ஆசிர்வாதங்களும் இருந்தது. இன்றைய நாட்களில் ஊழியக்காரர்கள் சாபத்தை குறித்து அதிகம் போதிப்பதில்லை, விசுவாசிகளும் அதை விரும்புவதில்லை. ஆனால் யோசுவா நியாயப்பிரமான புஸ்தகத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தையையும் ஒன்று விடாமல் வாசித்தான். ஜனங்களும் அதை ஆர்வத்துடன் கேட்டார்கள். அப்படிப்பட்ட ஆர்வம் நமக்குள்ளாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
வேதத்தை வாசிக்கும்போது அவசரப்படாமல் வாசிக்கவேண்டும். வாசித்த வேதப்பகுதியில் நாம் விட்டுவிட வேண்டிய பாவம் என்ன, எச்சரிப்பு என்ன, வாக்குத்தத்தம் என்ன, வழிநடத்துதல் என்ன என்பதை ஆராய்ந்து படிக்க வேண்டும். வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனுதினமும் மன்னாவை சேகரித்தார்கள். அதுபோல அனுதின தியானம், வேதத்தை அசைபோடுதல் போன்றவற்றை தேவ ஜனங்கள் இடைவிடாமல் கடைபிடிக்கவேண்டும்.
வேத வசனங்களை மனனம் செய்ய வேண்டும். என் வார்த்தைகள் உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்துக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். வசனத்தை மனனம் செய்யும்போது, சோதனைக்காலத்தில் ஏற்ற வசனத்தை ஆவியானவர் நமக்கு நினைப்பூட்டுவார். ஆவியானவர் நினைப்பூட்டுகிற வசனங்களை வைத்து சந்துருவை ஜெயிக்க நமக்கு மனனம் செய்த வேத வசனம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள். நாமும் நம்முடைய பரம கானானை சேரும்வரைக்கும் வேத வசனம் என்னும் மன்னாவை புசிக்க வேண்டும். மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார் (உபா 8:3) என்று வசனம் சொல்லுகிறது. பரம கானானை நாம் சேருவரைக்கும் தேவ வசனம் என்னும் மன்னாவினால் நாம் ஒவ்வொருவரும் பிழைப்போம். ஆகையால் தேவ வசனத்தை ஆர்வத்துடன், அவசப்படாமல், மனனம் செய்து படியுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org