சிறுமையும்,     மேன்மையும்.

அக்காலத்திலே நாளுக்குநாள்  தாவீதுக்கு  உதவிசெய்யும்  மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால்,     அவர்கள்  தேவசேனையைப்போல மகா சேனையானார்கள் (1 நாளா. 12:22).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/q8DsU1r5F4U

தாவீது,     சவுல் ராஜாவிற்குப் பயந்து,     தப்பியோடி  அதுல்லாம்  என்னும் கெபிக்குப் போனான். அவனால் தன் தகப்பன்  வீட்டிற்குப் போகமுடியவில்லை,     அவன் மேல் அபிஷேக தைலத்தை ஊற்றி அபிஷேகித்த சாமுவேல்  தீர்க்கதரிசியிடத்தில்  போகமுடியவில்லை,     தன்னை உயிர் போல நேசித்த  யோனத்தானிடத்திற்கும்  போகமுடியவில்லை.  அதுல்லாம் என்பதற்கு அடைக்கலம் என்பது பொருள். ஆனால் தாவீது அதுல்லாம் குகையில் தங்கியிருந்தாலும் அவனுடைய அடைக்கலம் கர்த்தராகக் காணப்பட்டார். கெபியில் காணப்பட்ட வேளையில் இரண்டு சங்கீதங்களை எழுதினான்,      எனக்கு இரங்கும்,     தேவனே,     எனக்கு இரங்கும்,     உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது@ விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் என்று சங்கீதம் ஐம்பத்தேழிலும்,     என் கூக்குரலுக்குச் செவிகொடும்,     நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்,     என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும்,     அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள் என்று சங்கீதம்  நூற்றிநாற்பத்திரண்டிலும்  ஜெபித்தான். தாவீது அங்கே காணப்படுவதை அறிந்த அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும்,     அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.  அவர்களோடு ஒடுக்கப்பட்டவர்கள்,     கடன்பட்டவர்கள்,     முறுமுறுக்கிறவர்கள் யாவரும் தாவீதோடு கூடிக்கொண்டார்கள்,     அவன் அவர்களுக்குத் தலைவனானான்,     இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறு பேர் அவனோடிருந்தார்கள். தாவீதைப் போல சிறுமைப்பட்டும்,     தாழ்த்தப்பட்டும் காணப்படும் வேளைகள் உங்கள் வாழ்க்கையிலும் வரலாம்,     ஊழியங்களின் பாதைகளில் வரலாம்,     சோர்ந்து போகாதிருங்கள். உங்களோடு காணப்படுகிறவர்கள் கூட எளியவர்களாய் காணப்படலாம். ஆனால் தேவன் சூழ்நிலைகளை மாற்றுகிறவர். 

சில வருடங்களுக்குப் பிறகு,     இஸ்ரவேலர்  எல்லாரும்  தாவீது எப்ரோனிலிருந்த வேளையில் அவனிடத்தில் கூடிவந்து: இதோ,     நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய  மாமிசமுமானவர்கள்  என்றார்கள். அவன் அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின்பு,     கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள்  தாவீதை  சமஸ்த  இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். பின்பு தாவீதினடத்த்தில் கூடிவந்தவர்கள் எல்லாரும் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருவன் முந்நூரு பேரை தன் ஈட்டியை ஓங்கி ஒருமிக்கக் கொன்றுபோட்டான். பெனாயா என்ற பராக்கிரமசாலி,     அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமில்லாமல்,     உறைந்த மழைபெய்த பனியின் நாளில் ஒரு கெபிக்குள்ளே இறங்கிப்போய்,     ஒரு சிங்கத்தைக் கொன்றான். இப்படி அனேக  பராக்கிரமசாலிகள்  தாவீதுக்கு உதவிசெய்யும் படிக்கு அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால்,     அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள். ஒருகாலத்தில் சிறுமையும் எளிமையுமானவர்கள்  தாவீதோடு காணப்பட்டார்கள்,     ஆனால் இப்பொழுது பராக்கிரமசாலிகளைக் கர்த்தர் கொடுத்தார். இயேசுவும் கூட சிலுவையில் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு,     நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,     அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி,     அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு,     அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து,     அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் பிதாவாகிய தேவன் அவருக்கு அநேகரைப்  பங்காகக் கொடுப்பேன் என்றும்,     பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார் என்றும் வாக்குக் கொடுத்து,     அப்படியே செய்தார். 

கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் சிறுமையைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்றும்,     கூட இருப்பவர்களாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று கூறுகிறீர்களோ,     கர்த்தர் உங்களை மேன்மைப் படுத்தும் நாட்கள் வருகிறது,     உங்களை ஆசீர்வதித்து உயர்த்தும் நாட்கள் வருகிறது. ஊழியங்களின் பாதைகளில் கூட சிறுமையடைந்தவர்களாய் காணப்படுகிறீர்களா,     என்னோடு நிற்க யாருமில்லை என்று எண்ணுகிறீர்களா,     கர்த்தர் உங்களுக்கு விசாலத்தைத் தருவார்,     உங்கள்  ஜீவனுக்கீடாய்  பலவான்களைக் கொள்ளை பொருளாய் தந்து உங்களைக் கனப்படுத்தி உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *