மத்தேயு 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/SQxb0M8Oc5E
குழுக்களாய் இணைந்து ஜெபிப்பதை நம் ஆண்டவர் விரும்புகிறார். காரணம் ஒருவன் ஆயிரம் பேரையும் இரண்டு பேர் பதினாயிரம் பேரையும் துரத்துவார்கள் என்று வசனம் சொல்லுகிறது. இயேசுவின் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர் கூடினால் அங்கே ஏற்கெனவே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்று இயேசு வாக்களித்திருக்கிறார். கூடி ஜெபிக்கும்போது அவருடைய பிரசன்னம் மிகவும் சீக்கிரத்தில் அதாவது நாம் இணைந்து ஜெபிக்க ஆரம்பிக்கும்போதே நம்மை தேவ பிரசன்னம் நிரப்பிவிடுகிறது.
பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய நெருக்கமான சீஷர்களை இயேசு கூடி ஜெபிப்பதற்கு அழைத்துக்கொண்டு போன போதுதான் இயேசு மறுரூபமானார். நம்முடைய வாழ்க்கையும் மறுரூபம் அடையவேண்டுமென்றால் சபையில் இணைந்து ஜெபிக்கும் நேரத்தை விட்டுவிடக்கூடாது. நான், என்னுடைய குடும்பம் இருக்கும் நிலையில் இருந்து மறுரூபம் அடைய வேண்டும் என்று வாஞ்சிப்போர்கள் நிச்சயமாக கூடி ஜெபிக்க உங்களை ஒப்புக்கொடுங்கள். சீஷர்கள் தூக்கமயக்கத்திலிருந்தாலும் அவர்களுடைய கூட்டு ஜெபத்தை இயேசு வாஞ்சித்தார்.
ரெவிதீமில், அமலேக்கியர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக வந்தபோது மோசே, ஊர், ஆரோன் கூடி கரங்களை உயர்த்தி ஜெபித்தார்கள். இதினிமித்தம் இஸ்ரவேல் ஜனங்கள் அமலேக்கியர்களை மேற்கொண்டு யுத்தத்தில் ஜெயத்தை சுதந்தரித்தார்கள். உங்கள் வாழ்க்கை ஜெயமுள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டுமா? தடைகளை கொண்டு வருகிற சந்துருவை ஜெயிக்க வேண்டுமா? மாம்சீக இச்சைகளை மேற்கொள்ள வேண்டுமா ? ஆம் என்று நீங்கள் சொல்வீர்களென்றால் உங்கள் சபையில் இணைந்து கூடி ஜெபிக்க உங்களை அற்பணியுங்கள்.
நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான். அந்த சொப்பனத்தின் அர்த்தத்தை அறிந்துகொள்ள தானியேல், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக இணைந்து ஜெபம் செய்தார்கள். அப்பொழுது சொப்பனத்தில் மறைபொருள் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நீங்களும் உங்கள் ஜனங்களும் அழியாமல், அழிவுக்கு தப்பித்துக்கொள்ள வேண்டுமா? அந்த வாஞ்சை உங்களுக்கு காணப்படுகிறதா? அப்படியென்றால் சபையில் இணைந்து ஜெபிக்க உங்களை அற்பணியுங்கள்.
பவுல் சொல்லுகிறான் ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து , அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம் (அப் 16:13). அங்கே கூடி ஜெபித்த இடத்தில் தான் ஐரோப்பா கண்டத்தில் லீதியாள் என்ற முதல் விசுவாசியை கர்த்தர் இரட்சித்தார். இன்றைக்கு நாம் காணும் செழிப்பான ஐரோப்பா கண்டத்தின் முதல் விசுவாசி லீதியாள் என்ற ஸ்த்ரீ. அவள் கூடி ஜெபித்ததால் கிடைத்த பலன். இன்றும் அழிந்துபோகும் ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற வாஞ்சை உங்களுக்குள்ளாக இருக்குமென்றால், சபையில் இணைந்து ஜெபிக்க உங்களை அற்பணியுங்கள்.
இயேசு சொன்னார் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று. ஒருமனதோடு ஜெபிக்கும்போது பரலோகத்திலிருக்கும் பிதாவினால் அது உண்டாகும் என்ற நிச்சயத்தை கர்த்தர் தருகிறார். ஒன்றிணைந்து ஜெபிப்போம், அப்பொழுது தேவன், நமக்கு மகத்தான காரியங்கள் செய்வார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org