கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல, பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை (சங். 131:1).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/MLT_rNM2zCY
தாவீது தன்னை கர்த்தருக்கு முன்பு வெறுமையாக்கி, இருதயத்தில் இறுமாப்பில்லை என்றும், கண்களில் மேட்டிமை இல்லை என்றும், மிஞ்சின பெரிய காரியங்களில் நான் ஈடுபடுவதில்லை என்றும் அறிக்கையிட்டு முழுவதுமாய் தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்தான். அவர் எந்த சூழ்நிலையில் இந்த சங்கீதத்தைப் பாடினார் என்று அறியமுடியவில்லை. ஒருவேளை கோலியாத்தைக் கொன்று திரும்பிவந்தவேளையில், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் எதிர்கொண்டு வந்தார்கள். அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை முறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது, அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள், இன்னும் ராஜாங்க மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் பொறாமை கண் கொண்டு பார்த்தான். தாவீதை தனக்குப் போட்டியாய் சவுல் ராஜா கருதினான், ஆனால் தாவீது எனக்கு அப்படிப்பட்ட எண்ணமில்லை என்று தேவனுக்கு முன்பு தன்னை தாழ்த்தி பாடியிருக்கக் கூடும். ஏற்கனவே சாமுவேல் தீர்க்கதரிசியால் அவன் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தும், தான் ராஜாவாக காணப்படுவது தேவச்சித்தம் என்பதை அறிந்திருந்தும் அதைக்குறித்து பெருமை கொள்ளாதவனாய், குறுக்கு வழியில் ராஜாவாக மாறுவதை விரும்பாதவனாகவும் காணப்பட்டான், அவனுக்குள்ளாய் மனரம்யமும், போதுமென்கிற மனதும் காணப்பட்டது.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருபோதும் இறுமாப்பு கொள்ளாதிருங்கள். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த கர்த்தராலே ஆகும் என்பது நேபுகாத்நேச்சாரின் கடைசி வார்த்தைகள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதுபோல பெரிய காரியங்களிலும், உங்களுக்கு மிஞ்சின காரியங்களில் தலையிட்டு உங்களைப் பெரியவர்களாய் காண்பிக்க வேண்டும் என்று விரும்பாதிருங்கள். பிசாசு அப்படிப்பட்ட எண்ணங்களைத் தூண்டுவான், ஏவாளிடம் நீங்கள் விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள், அவனும் புசித்தான். அவர்களுக்குத் தேவர்களைப் போலக் காணப்பட வேண்டும் என்ற மேட்டிமையின் எண்ணம் வந்ததினால் தேவன் புசிக்கலாகாது என்று கூறின நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தார்கள், அதன் விளைவு ஏதேனிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
தாவீது தன் ஆத்துமாவை, தாயின் பால்மறந்த குழந்தையைப் போல, அடக்கி அமரப்பண்ணினான் (சங். 131:2). ஒரு பாலகன் பால்மறக்கிற காலகட்டம் எளிதானதல்ல, அது மிகவும் கடினமானது, அதுவரை தாய்ப்பாலை நம்பியிருந்தவன், இனி மற்ற உணவு வகைகளை உட்கொள்ளத் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும். தாவீது கூட தன் ஆத்துமாவை அடக்கவும் அமரப்பண்ணவும் பழக்கினான், அவனுடைய மாமிசம் மிஞ்சின காரியங்களில் தலையிட விரும்பினாலும், மேட்டிமை கொள்ள வாஞ்சித்தாலும், அவன் அதற்கு இடம்கொடாமல் அதை அடக்கி ஆளுகிறவனாகக் காணப்பட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, மாமிசம் எப்போதும் மேட்டிமையானவற்றைச் சிந்திக்கச் செய்யும், நம்மை முக்கியமானவர்கள் என்று கருதும் படிக்குச் செய்யும், ஆகையால் நாம் மாமிசத்தை ஆவியினால் மேற்கொள்ளுகிறவர்களாகக் காணப்பட வேண்டும். அப்போது தான் நாம் கிறிஸ்துவின் தாழ்மையின் சிந்தையைத் தரித்து, ஜெயம் கொள்ளுகிற ஜீவியம் செய்யமுடியும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar