நீதி 13:12. நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wXadaL75NZY
நமக்கு காய்ச்சலோ, தலைவலியோ, உடல் வலியோ வரும்போது நம்மால் சரியாக தூங்கமுடிவதில்லை, சரியாக ஆகாரம் உட்கொள்ளமுடிவதில்லை, சரியாக நடக்கவோ உறங்கவோ முடிவதில்லை. டைபாய்டு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என்று வந்தால், அநேக நாட்கள் நம்முடைய சரீரம் சோர்வுற்று போய்விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் ஜெபித்து தேவையான மருந்து மாத்திரைகளை உட்கொண்டபிற்பாடு, அதன்பிற்பாடு உடலில் ஆரோக்கியம் வரும்போது, நமக்கு ஆனந்தமும் புத்துணர்ச்சியும் வந்துவிடுகிறது. அதுபோல, நீண்ட நாள் நாம் எதிர்பார்க்கிற காரியம் நடக்காமல், கால தாமதம் ஆகும்போது நம்முடைய இருதயம் இளைத்துப்போகிறது. இருதயத்தில் மனபாரங்கள் அதிகரிக்கிறது, சமாதான குலைச்சல்கள் உண்டாகிறது, சில சமயங்களில் நம்முடைய மகிழ்ச்சியை எங்கேயோ தொலைத்துவிட்டதுபோல உணருகிறோம். மற்றவர்களை பார்த்து புன்முறுவல் கூட செய்யமுடியாத அளவிற்கு இருதயத்தில் சோர்வுகள், பாரங்கள் வந்துவிடுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வாழ்க்கையில் தாமதமாகும் சில காரியங்களை குறித்து கர்த்தர் சொல்லுகிறார் நீங்கள் விரும்புவது வரும் என்பதாக. நீங்கள் விரும்பாததை நான் தருவேன் என்று கர்த்தர் சொல்லவில்லை. மாறாக, நீங்கள் விரும்புகிற காரியம் என்னுடைய சித்தத்தின்படி இருக்குமென்றால், அந்த காரியம் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒரு காரியத்தை நாம் உடனடியாக பெற்றுக்கொள்ளுவதை பார்க்கிலும் தாமதமாக பெற்றுக்கொள்ளும்போது தான் அதின் மேன்மையை நம்மால் நன்றாக உணரமுடியும், கர்த்தர் நல்லவர் என்பதையும் ருசித்துப்பார்க்கமுடியும். பசியில்லாதபோது சாப்பிடும் சாப்பிட்டிற்கும், பசியுள்ளபோது சாப்பிடும் சாப்பிட்டிற்கும் வித்தியாசம் உள்ளதைப்போல, நீண்ட நாள் கழித்து வரும் ஆசீர்வாதம் மிகவும் மேன்மையுள்ளதாக இருக்கும்.
ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் மதிய சத்துணவை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். விளையாட்டு வகுப்பு முடிந்து சில மாணவர்கள் கொஞ்சம் தாமதமாக நீண்ட வரிசையில் வந்து பின்னால் நின்றுகொண்டிருந்தார்கள். சாப்பாடு போடும் சத்துணவு ஆசிரியை பார்த்து, தாமதமாக வந்த மாணவர்கள் சீக்கிரம் எல்லாருக்கும் சாப்பாடு போடுங்கள், காரணம் எங்களுக்கு மிகவும் பசிக்கிறது என்று சொன்னார்கள். ஒருவழியாக கடைசியில் வந்து சத்துணவை வாங்கி சாப்பிட சென்றார்கள். முதலில் சத்துணவை வாங்கிய மாணவர்கள் இது என்ன சாப்பாடு? அவர்கள் சோற்றில் ஊத்தியது சாம்பாரா, இல்லை ரசமா என்றே தெரியவில்லை என்று முறுமுறுத்துக்கொண்டே சாப்பிட்டார்கள். தாமதமாக வந்த மாணவர்கள், தங்கள் பசியினிமித்தமாக, கொடுத்த ஆகாரத்தை மகிழ்ச்சியோடு சீக்கிரம் உட்கொண்டார்கள். அதுபோலத்தான் தாமதமாக வரும் எந்த நன்மையையும், ஆசீர்வாதமும் உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும்.
நம்முடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றோர்கள் தாங்கள் விரும்பிய ஆசீர்வாதத்தை தாமதமானாலும் பெற்றுக்கொண்டார்கள். சீக்கிரம் வரும் ஆசீர்வாதம் தங்காது என்றும் வேதம் சொல்லுகிறது. ஆகையால், சில காரியத்திற்காக நான் நெடுங்காலமாய் காத்திருக்கிறேன் என்று சொல்கிறவர்கள், கவலைபடாதிருங்கள். நீங்கள் விரும்புகிற காரியம் நிச்சயம் வரும். நீங்கள் விரும்புகிற ஆசீர்வாதங்கள் உங்களை வந்தடையும்படி கர்த்தர் செய்யும் போது, அது ஜீவ விருட்சத்தை போல் இருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org