நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் (லூக்கா 15:18).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/OIN25JX1Izo
சில வேளைகளில் தகப்பனுடைய அன்பின் மேன்மையும், அவர் வீட்டில் காணப்படுகிற பாதுகாப்பும், ஆசீர்வாதங்களும் நமக்குப் பெரிதாய் தெரிவதில்லை. ஆகையால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக, சுதந்திரமாகக் காணப்பட விரும்புகிறோம். மேலை நாடுகளில் குடும்ப உறவுகள் சிதைந்து காணப்படுவதற்கு வாலிப வயதில் காணப்படுகிற பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து வாழ்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. இயேசு, இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே இந்த பூமியில் மனுஷகுமாரனாக வந்தார். அதைக்குறித்த உவமையைக் அவர் கூறும்போது, ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். அவன் எல்லாவற்றையும் விற்று பணமாகச் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். இந்நாட்களில் கூட தகப்பன் கடினமாய் உழைத்துச் சேர்த்து வைத்திருக்கிற ஆஸ்திகளை அழிக்கிற ஊதாரி பிள்ளைகள் திரளாய் உண்டு. இளைய குமாரன் எல்லாவற்றையும் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்ச முண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், அதைக் கூட ஒருவனும் அவனுக்குக் கொடுக்கவில்லை. பன்றிகள் நியாயப்பிரமாணத்தின் படி அசுத்தமான மிருகம், அசுத்த ஆவிகள் கூட பன்றிக்கூட்டத்திற்குள் போக மனதாயிருந்தது. அப்படிப்பட்டவைகளை மேய்க்கவேண்டிய சூழ்நிலையில் அவன் தள்ளப்பட்டான்.
ஒருநாள் அவனுக்குப் புத்தி தெளிந்தது என்று வேதம் கூறுகிறது. அதுவரை அவன் அவனாகக் காணப்படவில்லை. அவனைப் பிசாசு ஆட்கொண்டு நடத்துகிறவனாய் காணப்பட்டான். ஆக்கையால்தான் தகப்பனை அசட்டைச் செய்து பிரிந்து சென்றான். பிசாசை வேதம் சிதறடிக்கிறவன் என்று வேதம் அழைக்கிறது, சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான், அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து என்று நாகூம் 2:1 கூறுகிறது. வாலிபப் பிள்ளைகள் கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாய் காணப்படவேண்டும், அவர்தான் உங்களுக்குத் தெளிந்த புத்தியைக் கொடுக்கிறவர். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் என்று 2 தீமத். 1:7 கூறுகிறது. இளையக் குமாரனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவேளை ஆண்டவருடைய அன்பை விட்டு, தூரம் போன ஜீவியம் செய்கிறவர்களாய் நீங்கள் காணப்பட்டால் உடனே ஆண்டவரிம் வந்துவிடுங்கள், ஆதி அன்பிற்குள்ளாய் வந்துவிடுங்கள். ஆண்டவரை விட்டு விலகி ஜீவிப்பது ஆபத்தில் முடிந்துவிடும். ஆகையால் காலதாமதமின்றி ஆண்டவரிடம் வந்துவிடுங்கள்.
இளைகுமாரனின் தகப்பன், தன் மகன் தூரத்தில் வரும்போதே, அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். ஆனால் அதை ஒன்றும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மாறாக தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்று கூறி அவர்கள் சந்தோசப்படத் தொடங்கினார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் எந்த நிலையில் இன்று இருந்தாலும் பரம தகப்பனிடம் வந்து விடுங்கள். அவர் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், உங்கள் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அடிமையாகவும், வேலைக்காரனாகவும் அல்ல, பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள ஆவலாய் காணப்படுகிறார், வருவீர்களா?.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar