அவன் அப்படிப்பட்டவனல்ல … (He is not like that … )

எண் 12:7. என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/sP0RqrNJGLI

மிரியாமும் ஆரோனும், மோசேக்கு விரோதமாக அவன் மனைவியினிமித்தம் எழும்பினார்கள். மோசேக்கு விரோதமாக பேசினார்கள். மோசேயோடு மாத்திரமல்ல கர்த்தர் எங்களோடும் பேசினார் என்று பெருமிதமும், கர்வமும் கொண்டார்கள். மனிதருடைய புகழ்ச்சியை நாட எத்தனித்தார்கள். இதைக் கேட்ட கர்த்தர் மோசே ஆரோன் மிரியாம் ஆகிய மூன்றுபேரையும் தனியாக ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வரச்செய்து ஆரோன் மிரியாமை பார்த்து கர்த்தர் பேச ஆரம்பித்தார். மோசேக்கு இவர்களைப் போலக் கர்வமோ, மனித புகழ்ச்சியை நாடவேண்டுமென்றோ, எண்ணமும் குணாதிசயம் அவனுக்கு இல்லை. மாறாக, மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். மற்ற ஒருவருக்கும் மோசேயை போலச் சாந்தகுணம் இல்லை. நாமும் மோசேயை போலச் சாந்தகுணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

தொடர்ந்து கர்த்தர், நான் தீர்க்கதரிசிகளோடு கூட பேச வேண்டுமென்றால் என்னைத் தரிசனத்தில் வெளிப்படுத்தி சொப்பனங்களில் தான் பேசுவேன் என்று சொன்னார். எல்லா தீர்க்கதரிசிகளிடமும் அப்படியாகத் தான் பேசி வந்தேன். எல்லா தீர்க்கதரிசிகளிடமும் மறைமுகமாகத் தான் பேசி வந்தேன். எல்லா தீர்க்கதரிசிகளும் நான் நேரடியாகக் காரியத்தை, மறைபொருளை வெளிப்படுத்தமாட்டேன். ஆனால் என் தாசனாகிய மோசே அப்படிப்பட்டவனல்ல என்று கர்த்தர் சொன்னார். நம்மைப் பார்த்து ஆண்டவர் இப்படி அழைக்கவேண்டும் இவன் என் தாசன் என்று. ஏன் மோசே மற்றவர்களை மாதிரி அல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார்?

காரணம், மோசே கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தான். உலகத்தில் பெரிய தலைவர்கள், அரசியல்வாதிகள் அவர்களுடைய தனிப்பட்ட அறையைச் சுத்தம் செய்வதற்குக் கூட நம்பகத்தன்மையுள்ள நபர்களை தங்கள் அருகில் வைத்துக்கொள்ளுவார்கள். அவர்களுக்கு வாகனம் ஓட்டும் ஓட்டுநராக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டிற்கு உணவு சமைத்துக் கொடுப்பவர்களாக இருக்கவேண்டுமென்றால், மிகவும் நம்பக்கூடியவர்களைத் தான் அருகில் வைத்துக்கொள்ளுவார்கள். போத்திப்பார் யோசேப்பை மிகவும் நம்பினதால் தான் அவன் வீடு முழுவதையும் கவனிக்கும் பொறுப்பை போத்திபார் யோசேப்பிற்கு கொடுத்தான். அதுபோல தான், கர்த்தருடைய வீட்டில் அவருக்கு நம்பகத்தன்மையாக இருக்கவேண்டுமென்றால், கர்த்தர் எல்லாவற்றிலும் யார் உண்மையாகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு மிக உயரிய பொறுப்புகளைக் கொடுத்து, அவர் ஊழியத்தை நிறைவேற்ற அழைப்பார். அப்படியாகத் தான் மோசே, மற்ற எல்லாரைக் காட்டிலும் அவன் கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாகக் காணப்பட்டான். நாமும் கர்த்தருடைய காரியங்களை இரண்டாவதாகவும், உலக காரியங்களை முதலாவதாகவும் வைத்துச் செயல்படலாகாது. அவர் கொடுக்கும் ஊழியத்தில் எங்கும் உண்மையாகச் செயல்பட வேண்டும்.

ஆகையால் தான் கர்த்தர் மோசேயிடம் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசினார். மற்ற எந்த தீர்க்கதரிசிகளிடமும் ஆண்டவர் இப்படி பிரத்தியட்சமாகப் பேசவில்லை. மாத்திரமல்ல, மோசே கர்த்தருடைய சாயலை காண்கிறவனாக காணப்பட்டான். நமக்கும் இப்படிப்பட்ட வாஞ்சை காணப்பட வேண்டும். என் கர்த்தர் மோசேயோடு பேசியது போல என்னோடு முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசவேண்டும்; கர்த்தருடைய சாயலை நான் காண வேண்டும் என்ற வாஞ்சை காணப்பட வேண்டும். உங்களைப் பார்த்து ஆண்டவர் என் தாசன் அப்படிப்பட்டவனல்ல என்று ஒரு வார்த்தை, மோசேயை பார்த்துச் சொன்னதுபோல சொல்வாரென்றால் அதற்கொத்த ஆனந்தமும் பாக்கியமும் வேறென்ன காணப்படும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *