சகரியா 4:7 பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/FD8Kd4yPA64
செருபாபேலுக்கு முன்பாக ஒரு பெரிய பர்வதம் காணப்படுகிறது. ஆனால் செருபாபேலின் கையில் ஒரு சிறிய தலைக்கல் காணப்படுகிறது. இந்த தலைக்கல் எப்படி பெரிய பர்வதத்தை சமபூமியாக்கும்?. செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆவியினாலே மாத்திரமே பெரிய பர்வதம் சிறிய தலைக்கல்லுக்கு முன்பாக சமபூமியாகும். அது எப்படி ஆகும் ? எப்பொழுது ஆகுமென்று கேட்டால் ? அதற்கான பதில், கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்பரிக்கவேண்டும். அப்படியாக ஆர்ப்பரிக்கும்போது கர்த்தருடைய கிருபை இறங்கும்போது பெரிய பர்வதம் சமபூமியாகும். தலைக்கல் என்பது இயேசுவை குறிக்கிறதாய் காணப்படுகிறது. அவரே சபைக்கு தலைக்கல்.
தேவ கிருபை என்றுமுள்ளது என்று பாடுவதைப்போல உங்கள் வாழ்க்கையில் பெரிய பர்வதம் போன்ற பொல்லாத சத்துருக்கள் எழும்பலாம், எப்பக்கமும் நெருக்கம் காணப்படலாம், சத்துரு சேனை தொடர்ந்து சூழ்ந்துகொள்ளலாம், அக்கினி சோதனை பட்சிக்க வரலாம், காரிருள் போன்ற கஷ்டங்கள் வரலாம், வெள்ளம்போல சத்துரு நிந்திக்க வரலாம் அப்படிப்பட்ட சூழ்நிலையில் தைரியமாக கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரியுங்கள். கிருபை பாவத்திலிருந்து மாத்திரம் விடுதலை தருவதில்லை. அதோடுகூட கிருபை உங்களுக்கு ஜெயத்தை கொடுக்கும், எதிராக நிற்கிற பர்வதங்கள் சமபூமியாக செய்யும். இனிமேல் எப்பொழுதெல்லாம் சூழ்நிலைகள் உங்களுக்கு விரோதமாக வருகிறதோ அப்பொழுதெல்லாம் சொல்லுங்கள் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்பதாக. தேவனுடைய கிருபை மாறாதது. மலையைப்போல நீங்கள் நம்பியிருக்கிற மனிதர்கள் உங்களைவிட்டு விலகினாலும், பர்வதங்களைப்போல இருக்கிற உங்கள் சொத்துக்கள் நிலைபெயர்ந்து போனாலும், எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், மனைவி, கணவன் கைவிட்டாலும், நேசித்தவர்கள் ஏமாற்றினாலும், எதுவும் இல்லாவிட்டாலும் கர்த்தருடைய கிருபை உங்களை விட்டு விலகாது. தேவ கிருபை உங்களோடுகூட இருக்கும். அந்த கிருபை உங்களோடு கூட இருந்தால் அதுவே உங்களுக்கு போதுமானது. பவுலை பார்த்து கர்த்தர் சொன்னார் என் கிருபை உனக்கு போதும். உன் அறிவு போதுமென்றோ, உன் பெலன் போதுமென்றோ, உன் ஆஸ்தி அந்தஸ்து போதுமென்றோ, உன் அனுபவம் போதுமென்றோ கர்த்தர் சொல்லவில்லை. மாறாக எல்லாவற்றிற்கும் மேலாக சொன்னார் என் கிருபை உனக்கு போதும். அந்த கிருபையை அறிக்கையிடுங்கள், ஆர்ப்பரியுங்கள். சூழ்நிலைகளுக்கு விரோதமாக கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரியுங்கள். அப்பொழுது செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும் என்று கர்த்தர் சொன்னதுபோல நீங்கள் தொடங்கின காரியத்தை நீங்களே செய்து முடிப்பீர்கள். முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாக கர்த்தர் செய்வார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org