காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளேயன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார், உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று (மத். 21:18,19).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VsZ7pnzPUu4
கர்த்தர் நம்மைத் தெரிந்து கொண்டதின் நோக்கம், கனியுள்ள ஜீவியம் செய்யும்படிக்கு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். கொஞ்சக்காலம் கைகொடுப்பதற்காய் மாத்திரம் அல்ல, கனி நம்மில் நிலைத்திருக்கும் படிக்கும், முதிர்வயது வரைக்கும் கனி தரவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். மரம் தன்னுடைய கனியினால் அறியப்படும் என்ற கர்த்தருடைய வார்த்தையிலிருந்து, நம்முடைய கனிகளை வைத்துத் தான் உலகம் நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இயேசு தன்னுடைய உலக ஊழியத்தின் கடைசி வாரத்தில் பெத்தானியாவிலிருந்து எருசலேம் நோக்கிச் சென்றார். அப்பொழுது அவருக்கு பசியுண்டாயிற்று, தூரத்தில் வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டார். அந்த நாட்கள் அத்திப்பழ காலமில்லை, இருந்தாலும் இலைகள் பச்சையாகவும், அடர்த்தியாகவும் அந்த அத்திமரத்தில் காணப்பட்டது. அவ்வாறு காணப்படும் போது கனிகள் காணப்பட வேண்டும், ஆகையால் கர்த்தர் கனியைத் தேடி அம்மரத்தண்டையில் வந்தார். வந்தபின்பு, இது வெறும் பகட்டான அத்திமரம் என்றும், கனிகள் காணப்படுவது போலப் பாசாங்கு செய்தது என்றும், பொய்யான விளம்பரம் செய்த மாய்மாலமான அத்திமரம் என்றும் கர்த்தர் அறிந்துக் கொண்டார். ஆகையால் இனி ஒருபோதும் உன்னில் கனிகள் காணப்படுவதில்லை என்று கர்த்தர் சபித்தார், உடனே அந்த அத்திமரம் வேரோடு பட்டுப் போயிற்று.
இந்நாட்களில் கிறிஸ்தவமும் பகட்டான, மாய்மாலமான காரியங்களுக்கு நேராகச் சென்றுகொண்டிருக்கிறது. போலி விளம்பரங்களும், சமூக ஊடக காட்சிகளும், செய்திகளும் ஜனங்களை வஞ்சிக்கிறது. சினிமாக் கூத்தாடிகளின் மேடைகளைப் போலக் கிறிஸ்தவ மேடைகளும், பலிபீடங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. கர்த்தருடைய ஜனங்களும், உண்மைக்கும் மாயைக்கும் இடையே அகப்பட்டு, பகுத்தறிய முடியாதபடிக்கு தவிக்கிறார்கள். ஆதி அப்போஸ்தல சபையில் முதல் பாவம் பாசாங்கு செய்ததினால் வந்தது, அனனியா, சப்பீரா என்ற விசுவாச தம்பதி, தங்கள் நிலத்தை விற்று முழுவதும் அப்போஸ்தலர்களுடைய பாதத்தில் வைக்கிறோம் என்று மாய்மாலம் செய்தார்கள், அதின் விளைவு மரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளே, மாயையை நம்பி, அதைப் பின்பற்றாதிருங்கள். பெரேயா பட்டணத்து ஜனங்களைப் போல வேதத்தோடு எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பகட்டையும், மாய்மாலத்தையும் நம்பி ஏமாந்து போகாதிருங்கள், அதனிமித்தம் சாபத்தையும், ஆத்தும மரணத்தையும் சம்பாதித்து விடாதிருங்கள். பதிலாகக் கனியுள்ள ஜீவியம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். உலக ஜனங்கள், உங்களில் இயேசுவைக் காணட்டும். மலைமேல் இருக்கும் பட்டணமாய், விளக்குத் தண்டின் மேலிருக்கும் விளக்காய் வெளிச்சம் வீசுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar