மேலானவைகளைத் தேடுங்கள்   (Set your mind on things above).

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்த துண்டானால்,      கிறிஸ்து தேவனுடைய வலத்துப்பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல,      மேலானவைகளையே நாடுங்கள் (கொலோ. 3:1,     2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/apcdQmeab68

கர்த்தருடைய பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்கும் போது இயேசுவோடு கூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும்,      அவரை  மரித்தோரிலிருந்தெழுப்பின  தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடே கூட எழுந்தவர்களாகவும் இருக்கிறோம். நாம் அப்படி ஞானஸ்நானம் பெற்று  கிறிஸ்துவுடன் எழுந்தது உண்மையானால் உன்னதங்களுக்குரிய  காரியங்களைத் தேடுகிறவர்களாகவும்,      அதையே நாடுகிறவர்களாகவும் காணப்பட வேண்டும். இந்நாட்களில் விசுவாசிகள்,      ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் பூமிக்குரிய காரியங்களில் அதிகமான நாட்டம் உடையவர்களாய் காணப்படுகிறார்கள். இப்பிரபஞ்சத்திற்குரிய ஜனங்கள் எதை ஆர்வமாய் தேடி அலைகிறார்களோ,      அதையே கர்த்தருடைய ஜனங்களும் செய்கிறார்கள். போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தி மிகுந்த ஆதாயம் என்று வேதம் கூறுகிறது,      ஆனால் உலகத்தானைப் போல பணமும் பொருளும் சம்பாதிக்க வேண்டும் என்று அதையே நோக்கமாய் கொண்டவர்களாயிருக்கிறார்கள்.  பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்,      இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்,      இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்,       பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்,      அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை,      அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை,      உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் என்று இயேசு கூறினார். ஆகையால் பூமியில் பொக்கிஷங்களைச் சேர்க்கவேண்டும் என்பது மாத்திரம் உங்கள் வாழ்க்கையின் நோக்கமாயிருந்தால்,      உங்கள் இருதயம் ஒருநாளும் உன்னதங்களுக்குரிய மேலானவைகளை தேடுவதாய் இருப்பதில்லை. 

கர்த்தருடைய பிள்ளைகளே,      பரலோக காரியங்களில் உங்கள் வாஞ்சையை வையுங்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். வேதத்தைத் தியானியுங்கள்,      கர்த்தரைப் பாடி துதித்து ஆராதியுங்கள். சபை கூடிவருதலை விட்விட்டுவிடாதிருங்கள். நல்ல ஆவிக்குரிய புஸ்தகங்களை வாசியுங்கள். ஏனோக்கும்,      நோவாவும்,      ஆபிரகாமும் தேவனோடு சஞ்சரித்தது போல நீங்களும் தேவனோடு சஞ்சரியுங்கள். அப்போது,      நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது,      நீங்களும் அவரோடே கூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் என்று கொலோ. 3:4 எழுதப்பட்டிருக்கிறது. பவுல் எழுதும் போது நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து என்று எழுதுகிறார். இன்று அனேகருக்குப் பலகாரியங்கள் ஜீவனாய் காணப்படுகிறது. சிலருக்கு விளையாட்டுகள் என்றால் ஜீவன்,      அதற்காய் எவ்வளவு மணி நேரத்தையும் செலவு செய்வார்கள். சிலருக்கு மனைவி என்றால் ஜீவன்,      அவள் போடுகிற கோட்டை தாண்டாத திரளான புருஷர்கள் உண்டு,      இப்படிப்பட்டவர்கள் நிமித்தம் பெற்றோரைக் கனவீனம் பண்ணி,      சாபத்தைச் சம்பாதிக்கிற திரளான விசுவாச,      ஊழியக்கார புருஷர்கள் உண்டு.  சிலருக்கு நண்பர்கள் என்றால் ஜீவன்,      அவர்களோடு சேர்ந்து நேரத்தை வீணடித்து கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களும் உண்டு. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு,      கிறிஸ்து எனக்கு ஜீவன் என்று மட்டுமல்ல,      அவருக்கும் நமக்கும் கிறிஸ்து தான் ஜீவன் என்றும் எழுதுகிறார்.  கிறிஸ்துவை ஜீவனாகக் கொண்டு,      மேலான உன்னதங்களுக்குரிய காரியங்களை நீங்கள் தேடும் போது,      கிறிஸ்து மத்திய வானில் சபையைச் சேர்த்துக் கொள்ள வெளிப்படும் போது,      நீங்களும் அவரோடே கூட மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டு அவரோடே வெளிப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *