தேவனுடைய தயவுள்ள கரம் உங்கள்மேலிருக்கும்

…… தன் தேவனுடைய தயவுள்ள கரம்  தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான். கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். எஸ்றா 7:9,10.

தேவனுடைய கரத்தை குறித்து வேதத்திலே நாம் வாசிக்கும்போது அது வல்லமையும், பராக்கிரமங்களையும் அற்புதங்களையும் செய்கிற கரமாக, பாதுகாக்கிற கரமாக வெளிப்படுகிறதை பார்க்கமுடியும். ஆகையால் தான் யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி ஜெபித்த வேளையில் உமது கரம் என்னோடிருக்கவேண்டும் என்று மன்றாடினான் (1 நாளா. 4:10).

எஸ்றாவோடு கூட தேவனுடைய தயவுள்ள கரம் இருந்தது என்று நாம் வாசிக்கிறோம். ஆகையால் அவர் சென்ற இடங்களிலெல்லாம் கர்த்தருடைய தயவு வெளிப்பட்டது. நேபுகாத்நேச்சாரால் இடித்து தள்ளப்பட்ட தேவாலயத்தை கட்டும்படிக்கு செருபாபேலின் தலைமையில் முதல் அணி 538 BC   வாக்கில் புறப்பட்டு வந்தது. அடுத்ததாக 80 வருஷங்கள் கழித்து எஸ்றாவின் தலைமையின் கீழ் இரண்டாவது அணி 458 BC  வருட வாக்கில், ஜனங்களை ஆவிக்குரிய விதமாய் நியாயப்பிரமாணத்தின் படி,  திரும்ப எடுத்துகட்டுவதற்கு புறப்பட்டு வந்தார்கள்.  அதன்பின்பு இடித்து தள்ளப்பட்ட எருசலேம் பட்டணத்தின் மதில்களை எடுத்துக்கட்ட நெகேமியாவின் தலைமையின் கீழ் மூன்றாவது கூட்டம் சுமார் 12 வருடங்கள் கழிந்து 445 BC வாக்கில் புறப்பட்டு வந்தார்கள்.

எஸ்றாவோடு கர்த்தருடைய தயவுள்ள கரம் இருந்ததினால் அவன் கேட்டதையெல்லாம் ராஜா கொடுத்தான் என்று எஸ்றா 7:6-ல் வாசிக்கிறோம். அதுபோல கர்த்தருடைய கரம் அவனுடன் இருந்ததால் அவன் திடன்கொண்டான் (எஸ்றா 7:28) என்று எழுதப்பட்டிருக்கிறது. வழியிலே சத்துருவை விலக்கி, அவர்களுக்கு துணைசெய்யும்படிக்கு, தேவனுடைய கரம் அவர்களுக்கு நன்மையாக இருந்தது என்று எஸ்றா 8:22.31ல் வாசிக்கிறோம்.   அதுபோல நம்மோடும் கூட கர்த்தருடைய கரம் ஆசிர்வதிக்கிற கரமாக, பலப்படுத்துகிற கரமாக, தயவு பாராட்டுகிற கரமாக, நன்மை செய்கிற கரமாக, சத்துருவின் கரத்திலிருந்து விடுவிக்கிற கரமாக எப்பொழுதும் கூட இருக்கும்.

எஸ்றாவோடு தயவுள்ள கர்த்தருடைய கரம் இருந்ததின் காரியமென்ன?  அவன் கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், அவற்றை உபதேசிக்கவும், தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான் என்று எஸ்றா 7:10ல் வாசிக்கிறோம்.

அதுபோல நாம் வேதத்தை வாசிக்கவும், ஆராயவும் நம்முடைய இருதயங்களை பக்குவ படுத்தவேண்டும். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டு என்று யோவான் 5:39ல் வாசிக்கிறோம். வாசிப்பதும், தியானிப்பதும் போதாது. அவற்றின்படி செய்யவும் நம் இருதயங்களை பக்குவபடுத்தவேண்டும். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் என்று வெளி. 1:3-ல் வாசிக்கிறோம். நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்(மத். 7:24) என்று நம்முடைய கர்த்தராக ஆண்டவர் சொன்னதை நினைவு கூருவோம். மாத்திரமல்ல சமயம் வாய்த்தாலும் இல்லையென்றாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாக கற்றுகொடுக்கிறவர்களாகவும் நாம் காணப்படவேண்டும்.  பிலிப்பு எத்தியயோப்பிய மந்திரியிடம் அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு,  நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்று கேட்ட வேளையில் ஒருவன் எனக்கு தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறதை பார்க்கிறோம். ஆகையால் கருத்தாய் கற்றுகொடுக்க நம் இருதயங்களை பக்குவ படுத்தவேண்டும். அப்பொழுது தேவனுடைய தயவுள்ள கரம் எஸ்றாவோடு கூட இருந்ததைபோல உங்களோடும் கூட எப்பொழுதும் தயவுள்ளதாக இருக்கும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Appa Unthan Thayavu, Uthamiyae Vol. 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *