அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார், அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன் (எசேக்கியேல் 37:3).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/DQad3atIWTs
எழுப்புதலைக் குறித்து இந்நாட்களில் எங்கும் பேசப்படுகிறது. உலர்ந்த நிலையில் காணப்படுகிற ஜனங்களுக்குள் உயிர் மீட்சி வரவேண்டும் என்பது எல்லாருடைய வாஞ்சையும், ஜெபமுமாய் காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனியச் சிறையிருப்பில் காணப்பட்ட வேளையில் அவர்களுடைய நிலையும் உலர்ந்து போன எலும்புகளைப் போலக் காணப்பட்டது. அவர்களுடைய அப்போதைய நிலையையும், எதிர்காலத்தில் சிறையிருப்பிலிருந்து அவர்கள் விடுதலையாகும் போது அவர்களுக்குள் காணப்படப்போகிற எழுப்புதலையும் குறித்து விளக்குவதற்கு, எசேக்கியேலை எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் கர்த்தர் அழைத்துக் கொண்டு சென்று, அவைகளின் நடுவே நிறுத்தி, அதைச் சுற்றி நடக்கப்பண்ணினார். எலும்புகள் மகா திரளாகவும், மிகவும் உலர்ந்ததுமாய் காணப்பட்டது. கர்த்தர் எசேக்கியேலை நோக்கி, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார், அதற்கு அவன் நம்பிக்கையற்றவனாகி, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றான். இந்நாட்களில் காணப்படுகிற கிறிஸ்தவர்களுடைய நிலையைப் பார்க்கும் போது, இவர்களுக்குள் ஒரு உயிர் மீட்சி ஏற்படுமா என்பது கேள்விக்குறியாய் காணப்படுகிறது. நிர்விசாரமும், சாங்கோபாங்கமும், கெர்வமும் சோதோமைப் போல எங்கும் காணப்படுகிறது. பரலோக சாயலுக்கொத்த ஆராதனை செய்யாமல் வேதவார்த்தைகளை புரட்டுவதில் மும்முரமாய் காணப்படுகிற சுவிஷேச வியாபாரிகளைப் பார்க்கும் போது, தங்களுக்கென்று கோடி கோடியாய் பணத்தைச் சேர்த்துக் கட்டமைப்புகளை தங்களுக்கும் தங்கள் சந்ததிகளுக்கென்றும் உருவாக்குகிற ஊழியர்களையும் பார்க்கும் போது, நம்முடைய நாட்களில் எழுப்புதல் ஏற்படுமா என்பது கேள்விக்குறிதான்.
எழுப்புதல் ஏற்படுவதற்கு எசேக்கியேல் செய்யவேண்டிய சிலகாரியங்களைக் கர்த்தர் கற்றுக் கொடுத்தார், அவை நமக்கும் பாடமாகக் காணப்படுகிறது. முதலாவது உலர்ந்த எலும்புகளைப் பார்த்து கர்த்தருடைய வார்த்தையை பேசும் படிக்குக் கர்த்தர் கூறினார். இன்றைக்கும் சபை எழுப்புதல் அடைவதற்குத் துப்புரவான கர்த்தருடைய வார்த்தைகள் பலிபீடங்களிலிருந்து வெளிப்பட வேண்டும். ஆதியாகமம் 1:1லிருந்து வெளிப்படுத்தல் 22:21 வரைக்கும், தேவனுடைய பிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாய் நிறுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய சகல ஆலோசனைகளையும் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தையில் தான் ஆவியும், ஜீவனும் காணப்படுகிறது, அதுவே மனுஷனை உயிர்ப்பிக்க வல்லமையுள்ளது. இரண்டாவது ஆவியை பிரவேசிக்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போது, ஆவியானவர் வசனத்தைக் கேட்ட அத்தனை பேர் மேலும் இறங்கினார். அவர்கள் பற்பல பாஷைகளைப் பேசி, தேவனைப் புகழ்ந்தார்கள். அங்கே மனந்திரும்புதலும், ஞானஸ்நானமும், எழுப்புதலும் உண்டானது. ஆவியான தேவனுக்குச் சபைகளில் இடங்கொடுக்கவில்லை என்றால் எழுப்புதல் அடைவது இயலாதக் காரியம். அவர் பாவங்களையும், நீதியையும், வரப்போகிற நியாயத்தீர்ப்பையும் குறித்து ஜனங்களைக் கண்டித்து உணர்த்துகிறவர். ஆவியானவர் தான் ஜனங்களை மறுரூபப்படுத்தி, நம்மில் கிறிஸ்துவின் சாயலை உண்டாக்குகிறவர். மூன்றாவது நரம்புகளைச் சேர்ப்பேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். நரம்புகளின் வேலைகளில் ஒன்று என்னவெனில் செய்திகளை மூளையிலிருந்து சரீரத்தின் அவயவங்களுக்கும், அதுபோல சரீரத்தின் அவயவங்களிலிருந்து செய்திகளை மூளைக்கும் கொண்டு செல்வதாகும். சரீரம் முழுவதும் நரம்புகளாய் இணைக்கப்பட்டிருக்கிறது. சபையில் ஜெபிக்கிறவர்கள் நரம்புகளைப் போலக் காணப்படுகிறார்கள். சபை கிறிஸ்துவின் சரீரம், அதற்குத் தலை கிறிஸ்துவாய் காணப்படுகிறார்.
சபை மக்கள் ஜெபிக்கும் போது, கர்த்தர் எழுப்புதலைக் கட்டளையிடுவார். ஆனால் திறப்பிலே நின்று ஜெபிக்கிற ஒருவனைக் கர்த்தருடைய கண்கள் இந்நாட்களில் தேடுகிறது. ஐந்தாவது, மாமிசத்தை உண்டாக்குவேன் என்றும் கர்த்தர் கூறினார். ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி, அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாமிசத்தில் மாமிசமுமாய் இருக்கிறாள் என்றான். அவர்கள் ஒரே மாமிசமாயிருப்பார்கள் என்று கர்த்தர் கூறினார். அது ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது. எழுப்புதலுக்குச் சபை மக்களின் ஐக்கியம் மிகவும் முக்கியமானது. ஆதிசபையின் நாட்களில் பலத்த எழும்புதல் காணப்பட்டதின் இரகசியம் அப்போஸ்தலர்கள், விசுவாசிகளுக்குள் ஒருமனமும் ஐக்கியமும் காணப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே, நம்மில் காணப்படுகிற ஐக்கியம் சபையிலும், தேசத்திலும் எழுப்புதலைக் கொண்டுவரும். ஆறாவதாக, கர்த்தர் தோலினால் மூடுவேன் என்று வாக்களித்தார். எலும்புகள், நரம்புகள், மாமிசம் எல்லாவற்றையும் மூடி வைத்திருப்பது தோலாகும். ஆவிக்குரிய ஜீவியத்திலும் எல்லாவற்றையும் மூடி மறைப்பது அன்பாகக் காணப்படுகிறது. அன்பு திரளான பாவங்களை மூடும் என்று வேதம் கூறுகிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு இவை மூன்றும் நிலைத்து நிற்கிறது, இவைகளில் அன்பே பெரியது.
எசேக்கியேல் கர்த்தர் கட்டளையிட்டபடி தீர்க்கதரிசனம் உரைத்தான், உடனே இரைச்சலும் அசைவும் எலும்புகளுக்குள் உண்டாயிற்று, அவைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது, நரம்புகளும், தசைகளும் உண்டானது, கர்த்தர் தோலினால் மூடி ஒரு பெரிய சேனையாய் எழும்பி நிற்கும் படிக்குச் செய்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய நாட்களில் எழுப்புதலைக் காணக் கர்த்தர் கட்டளையிட்டபடி ஒவ்வொரு காரியத்தையும் செய்வோம், பலத்த எழுப்புதலைக் காண்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar