நீர் சிநேகிக்கிறவன்(ள்) (The one You love).

யோவான் 11:3 அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QwLUsvMiBtc

இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் இருக்கும் போது, சில நபர்களுடன் அதிக அன்பு உள்ளவராக காணப்பட்டார். அதில் ஒருவன்தான் பெத்தானியாவை சேர்ந்த லாசரு. லாசரு தன் சகோதரிகளான மார்த்தாள் மற்றும் மரியாளுடன் வசித்து வந்தான்.

இயேசு பெத்தானியா செல்லும் போது, அவர்கள் வீட்டிற்கு சென்று வேத வசனங்களை போதிப்பது உண்டு. ஒருவிசை லாசரு வியாதியாய் இருக்கும்போது, அவள் சகோதரிகள் “நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்” என்று சொல்ல இயேசுவிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். லாசரு மரித்து நான்கு நாள் கழித்து பெத்தானியா வரும் இயேசு, மரியாளும் மற்றவர்களும் அழுகிறதை கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து அழுகிறார். இதை பார்த்த யூதர்கள் “இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” (யோவான் : 11:36) என்றார்கள். பின்பு இயேசு லாசருவை வைத்திருந்த கல்லறையினடத்திற்கு வந்து அவரை உயிரோடு எழுப்பினார்.

இயேசுவால் நேசிக்கப்படுகிறதற்கு லாசரு என்ன செய்தான். இயேசுவின் வசனங்களை கேட்டு அதன்படி ஜீவித்தான். நம்மில் அநேகர் இயேசுவே, நான் உம்மை சிநேகிக்கிறேன். I love you அப்பா என்று சொல்வதுண்டு. ஆனால் அவரால் நேசிக்கபடுகிறவர்களாக இருக்கிறோமா என்று சிந்தித்து பார்ப்பது உண்டா ? அவருடைய சிநேகிதர்களாக இருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து பார்ப்பது உண்டா ?

மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகின்றது (லூக்கா 10:39). உண்மையாகவே அவரை சிநேகிக்கிறவர்கள் அவருடைய பாதத்தில் அமர விரும்புவார்கள்.
வேதவார்த்தைக்கு செவிசாய்த்து அதின்படி வாழ்வார்கள். அவருக்காக செயல்படுகிறவர்களாகவும், சுத்தமான இருதயமுடையவர்களாகவும், நல்மனச்சாட்சியுள்ளவர்களாகவும், எல்லாவற்றிலும் முன்மாதிரியானவர்களாகவும் காணப்படுவார்கள்.

இயேசு சீஷர்களை பார்த்துதான் “நான் உங்களை சிநேகிதர் என்றேன்” என்கிறார் (யோவான் :15:15). எவ்வாறு இயேசுவின் சீஷர்களாய் மாறுவது ? யார் இயேசுவின் உண்மையான சீஷன் ? என்பதற்கு என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள் என்று இயேசு கூறுகிறார் (யோவான்: 8:31).

எனவே இயேசுவின் உபதேசத்திற்கு கீழ்படிந்து, ஞானஸ்நானம் பெற்று, மாறுபாட்டின் வாழ்க்கை வாழ்ந்து, அன்பிலும், சபை கூடிவருதலிலும், அப்பம் பிட்குதலிலும், சுவிஷேசம் உரைப்பதிலும் நிலைத்திருந்து, இயேசுவின் சீஷர்களாயும், அவரால் சிநேகிக்கப்படுகிறவர்களாயும் வாழ இன்றே உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Sam David
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *