சங் 30:5. அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/FhHRFUQHmjc
மனிதர்களுடைய கோபம் பல வருஷங்கள் இருக்கும். ஆனால் கர்த்தருடைய கோபம் ஒரு நிமிஷம் மாத்திரமே இருக்கும் என்று வசனம் சொல்லுகிறது. பக்கத்துவீட்டு நபரிடம் அநேகர் பல வருஷங்களாக பேசுவதில்லை. திருமண விழா, பிறந்தநாள் விழா என்று சென்றாலும், அங்கேயும் மற்ற நபர்களிடம் கோபம் கொண்டு பேசாமல் இருக்கும் ஜனங்கள், வீணான பெருமையினிமித்தம் மற்றவர்களை பகைத்து பேசாமல் இருக்கும் ஜனங்கள் என்று அநேகரை பார்க்கமுடிகிறது. சிறிய சிறிய காரியங்களுக்கு மற்றவர்கள் மேல் கோபங்கொண்டு பேசாமல் இருப்பது நம்முடைய வாழ்க்கையில் சமாதான குலைச்சலை கொண்டு வரும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சபைகளிலும் கூட அநேக விசுவாசிகள் மற்ற விசுவாசிகள் மேல் கோபங்கொண்டு அவர்களோடு பல மாதங்கள், பல வருஷங்கள் பேசாமல் இருப்பதை நாம் காணமுடிகிறது. கர்த்தர் நம்மீது கோபங்கொண்டு பேசாமல் இருந்தால், நம்முடைய வாழ்க்கை எப்படியாக இருக்கும் சற்று சிந்தித்துப்பாருங்கள். எத்தனையோ முறை நாம் கர்த்தரை காயப்படுத்தியிருக்கிறோம், எத்தனையோமுறை கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கவில்லை. இப்படியிருக்க உண்மையை சொன்னால் கர்த்தர் தான் நம் மீது கோபங்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும். ஆனால் கர்த்தர் நம்மோடு பேசாமல் இருந்தால், நாம் இந்த உலகில் வாழ்வதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். சங்கீதக்காரனாகிய தாவீது சொல்லுகிறான் அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார் (சங் 103:9) என்பதாக.
ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறான் அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர் (ஏசா 12:1) என்பதாக. கர்த்தருடைய கோபம் ஒரு நிமிஷத்தில் நீங்கிவிடும். தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ என்று வசனம் சொல்லுகிறது. நம்மை சீர்படுத்தி நம்மில் இயேசுவை காண அவர் சிட்சிப்பதுண்டு. ஆனால் கோபங்கொண்டு புறம்பே தள்ளாத நல்ல தேவன் நம்முடைய கர்த்தர்.
மறுபுறம், கர்த்தருடைய தயவு நீடிய வாழ்வு. அதாவது உங்களுடைய வாழ்நாள் முழுவதும் தேவ தயவு உங்களுக்கு இருக்கும். மோசே யோசேப்பு தாவீதுக்கு இருந்த தேவ தயவு உங்களுக்கும் இருக்கும். இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன் (ஏசா 54:7) என்று கர்த்தர் சொல்லுகிறார். தாவீது தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். பவுல் எபேசு சபைக்கு சொல்லும்போது சொல்லுவான் தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார் என்பதாக. அப்படிப்பட்ட தேவ தயவு உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பது எதனை பெரிய சிலாக்கியம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org