நீதியுள்ள ஜீவியம் செய்யுங்கள் (Live righteously )

ரோமர் 14:17. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/Deznp1jCAH4

ஜெர்மன் நாட்டில் ஒரு தம்பதி வாழ்ந்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் கணவன் ஒரு கோரமான வாகன விபத்தில் மரித்துப்போய்விட்டார்கள். கணவனை இழந்த அந்த சகோதரி புறமார்க்கத்திலிருந்து வந்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள். வாகன விபத்தில் மரித்த அவர் தனக்கு ஒரு இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்தார். காலை அலுவலகத்திற்கு போக ஆரம்பிப்பதிலிருந்து மீண்டும் வீட்டிற்கு வரும் வரை விபத்து ஏற்பட்டால், அவரை சேர்ந்தவருக்கு சுமார் 12 இலட்சம் இந்திய ரூபாய் கொடுப்பதாக இன்சூரன்ஸ் கம்பெனியிடம் பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அந்த நபர் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து, சற்று நேரம் கழித்து வீட்டிற்கு பொருள் வாங்கிச்செல்ல வெளியே போனபோது வாகன விபத்து ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் அந்த சகோதரியின் உறவினர்கள், சபை விசுவாசிகள் அநேகர் வந்து அவளுடைய கணவர் அலுவலகத்திலிருந்து வந்தபோது தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று சொல். அப்படி சொல்லும்போது உனக்கு பன்னிரண்டு இலட்சம் ரூபாய் கிடைக்கும். அதை விட்டு விடாதே. இந்த சிறிய பொய் சொல்வதால் அந்த கம்பெனிக்கு ஒரு நஷ்டமும் வரப்போவதில்லை என்று ஆலோசனை சொன்னார்கள்.

சில நாட்கள் கழித்து இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்தவர்கள் அந்த சகோதிரியிடம் அவள் கணவன் எப்படி மரித்தார்கள் என்று விசாரித்தார்கள். அவள் உள்ளபடி, என் கணவர் வீட்டிற்கு வந்து, மீண்டும் வெளியே சென்றபோது தான் மரித்தார்கள் என்று சொன்னாள். இதினிமித்தம் அவளுக்கு பன்னிரண்டு இலட்சம் கிடைக்காமல் போனது. இதன் பின்பு சபை விசுவாசிகள், உறவினர்கள் வந்து ஏன் இப்படி செய்தாய் என்று வினவினார்கள். அவள் சொன்னாள், உலகத்தில் உலகத்தார் எப்படி வேண்டுமானாலும் அநீதியாக ஜீவிக்கலாம். ஆனால் எனக்குள் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. நான் அநீதியாய் நடந்துகொள்ள கூடாது. அநீதியாய் அந்த பன்னிரண்டு இலட்சத்தை பெற்றிருப்பேனென்றால், அதற்கடுத்தபடியாக இருக்கும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷத்தையும் நான் இழந்திருப்பேன். இப்பொழுதோ எனக்கு சமாதானமும் சந்தோஷமும் இருக்கிறது என்பதாக.

வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 5:20) என்று இயேசு தன் மலைப்பிரசங்கத்தில் கூறினார். அநியாய சம்பாத்தியம் வேண்டாம். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது (1 பேது 3:12) என்ற வசனத்தின்படி நீதியாய் ஜீவிக்கும்போது கர்த்தருடைய கண்கள் உங்கள் மேல் நோக்கமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *