மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு  ஆராதனை செய்யுங்கள் (Worship the Lord with gladness).

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு  ஆராதனைசெய்து,      ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள் (சங்.100:2).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/X6RufKNXNxE

கர்த்தர் நம்மை பிரித்தெடுத்ததின் நோக்கம் அவரை ஆராதிப்பதற்காக. இஸ்ரவேல்  ஜனங்களை  பார்வோனுடைய  கைக்கு விலக்கி மீட்டது அவரை ஆராதிக்கும்படிக்கு என்று வேதம் கூறுகிறது. நாம் கர்த்தரை ஆராதிக்கும் போது அவருடைய பிரசன்னத்தினால் நம்மை மூடுகிறார். இரண்டு மூன்று பேர் ஆண்டவருடைய நாமத்தில் கூடி கர்த்தரை ஆராதிக்கும் போது அவருடைய பிரசன்னம் இறங்கி வருகிறது. ஆண்டவருடைய பிரசன்னம் நம்மை மறுரூபப்படுத்தும்,      நம்முடைய மண்ணான சரீரத்தில் மகிமையின் தேவனுடைய பிரசன்னம் இறங்கிவரும் போது,      நாம் கொஞ்சம் கொஞ்சமாய் இயேசுவின் சாயலை அணிவோம்;. நம்மைப் பார்க்கிறவர்கள் இயேசுவின் சாயலைக் காணப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் மகிழ்ச்சியோடு கர்த்தரை ஆராதிக்க வேண்டும். கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன் என்று சங்கீதக் காரனாகிய தாவீது கூறினான். அப்படிப்பட்ட மகிழ்ச்சியோடு தேவசமூகத்தில் கடந்து வர  வேண்டும். இந்நாட்களில் ஆண்டவருடைய சமூகம் அனேகருக்கு மகிழ்ச்சியாய் தெரிவதில்லை,      ஆகையால் சோர்வோடும்,      சோகத்தோடும் கடந்து வருகிறார்கள். அவர்களால் விடுதலையோடு தேவனை ஆராதிக்க முடிவதில்லை,      வந்தவண்ணமாகவே திரும்பிச் செல்வார்கள். மேலை நாடுகளில் சபைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. உலகம் கொடுக்கிற சிற்றின்பங்களினால் கிடைக்கிற மகிழ்ச்சியை நாடிப்போகிறார்கள்,      ஆனால் கர்த்தருடைய சமூகத்தில் காணப்படுகிற நித்திய மகிழ்ச்சியைக் குறித்த வாஞ்சையில்லாதவர்களாய் காணப்படுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,      உண்மையான மகிழ்ச்சி தேவனுடைய சமூகத்தில் மட்டும்தான் காணப்படுகிறது. அவருக்குள் மகிழ்ச்சியாய் காணப்படுவதே நம்முடைய பெலனாகும். ஆகையால் உற்சாக மனதோடு கர்த்தரைச் சேவியுங்கள். 

அவர் வாசல்களில் துதியோடும்,      அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து,      அவரைத் துதித்து,      அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள் என்று சங்.100:4 கூறுகிறது.   கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளையும் உபகாரங்களையும் நினைத்துப் பார்க்கும் போது துதியும்,      ஸ்தோத்திரமும்,      புகழ்ச்சியும்,      ஆனந்த சத்தமும் தானாய் வரும். தாழ்வில் நம்மை நினைத்த தேவனை எண்ணிப் பார்த்தால்  துதி பலித் தானாய் எழும்பும். கறவலாடுகளுக்குப் பின்பாகக் காணப்பட்ட தாவீதைக் கர்த்தர் தெரிந்தெடுத்து அவனை ஆசீர்வதித்து உயர்த்தி சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாய் மாற்றினதை அவன் நினைத்த வேளைகளிலெல்லாம் துதியின் சங்கீதம் பாடுகிறவனாய் காணப்பட்டான். சொஸ்தமான பத்து குஷ்ட ரோகிகளில் ஒருவன் மகிழ்ச்சியோடு திரும்பிவந்து உரத்த சத்தமாய் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினான். இந்நாட்களில் நம்மால் தேவனைத் துதிக்கவும்,      நன்றி செலுத்தவும் முடியவில்லை,      அதற்குக் காரணம் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிற இருதயம் நமக்குள் இல்லாமல் இருப்பதே. இன்னும் வேண்டும் என்று ஆசைகொண்டு,      பாதாளம் எப்படித் திருப்தியடையாமல் காணப்படுகிறதோ,      அதுபோல திருப்தியில்லாமல் காணப்படுவதினால் ஆண்டவருக்கு நன்றி செலுத்த முடியவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே நீங்கள் பெற்றிருக்கிற ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துவதே,      கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பதின் வழியாகும்.  நம் வாழ்க்கையில் இந்நாட்களில் காணப்படுகிற ஆசீர்வாதங்கள் உலகத்தில் கோடிக்கணக்கான ஜனங்களுக்கு இல்லை. உண்ண உணவும்,      உடுக்க உடையும்,      தங்குவதற்கு ஒரு வீடும் காணப்படும் என்றால் நாம் ஐசுவரிய வான்கள் என்பதை மறந்து போய்விடாதிருங்கள். ஆகையால் துதியோடும்,      மகிழ்ச்சியோடும் கர்த்தரை ஆராதிக்க உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *