நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர். லேவியராகமம் 26:13.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/F3b7pZm3Ew8
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்த்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்ட பின்பு, கர்த்தர் சீனாய் மலையில் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தபோது இந்த வசனத்தைக் கூறுகிறார். இந்த அதிகாரத்தின் முதல் 13 வசனங்களை நாம் வாசிக்கும்போது, ஒரு சில காரியங்களை கற்றுக்கொள்ள முடியும்.
ஏற்கனவே நுகத்தடி முறிக்கப்பட்டு பிசாசின் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு நிமிர்ந்து நடக்கிற ஒவொருவரையும் பார்த்து தேவன், * மீண்டும் பழைய அடிமைத்தனத்திற்குள் செல்லக்கூடாது என்றும், * கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லுவதை பார்க்கமுடியும். அப்போதுதான் நம்மால் கிறிஸ்துவின் வருகை மட்டும் நிமிர்ந்து நடக்கமுடியும். அதிலும் குறிப்பாக, சுரூப நமஸ்காரத்திற்கு மீண்டும் செல்லக்கூடாது என்றும், அதே வேளையில் ஓய்வுநாட்களை பரிசுத்தத்தோடும் பயபக்தோயோடும் ஆசாரிக்க வேண்டுமென்றும் கண்டிப்புடன் கூறுவதை முதல் இரு வசனங்களில் வாசிக்கமுடியும். ஆம் தேவ ஜனங்களே, நாம் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டபின் மீண்டும் பழைய நுகத்தடிக்குள் செல்லக்கூடாது. எப்படி அடக்கம்பண்ணப்பட்ட சரீரத்தை மீண்டும் தோண்டிப் பார்க்கமாட்டோமோ, அதேபோல் பழைய வாழ்க்கையை தோண்டிப்பார்க்கக் கூடாது. மாறாக, நாம் இன்னும் புதுப்பிக்கும் படியாகவும், பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தமடையும்படியாக பரிசுத்த ஆலயத்தை வாஞ்சிக்கிறவர்களாகவும் ஓய்வுநாளை பரிசுத்தத்தோடு ஆசாரிக்கிறவர்களாகவும் காணப்படவேண்டும் .
தாவீது ராஜா சங்கீதம் 27:4ல் கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் என்று கூறுகிறார். இதைத்தான் கர்த்தரும் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அதாவது விடுதலையாக்கப்பட்டவன் இருக்கவேண்டிய அல்லது வாஞ்சிகவேண்டிய இடம் கர்த்தருடைய ஆலயமாகத்தான் இருக்க வேண்டும்.
“உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று சொல்லுகிற கர்த்தர், தம்முடைய ஜனத்திற்கென்று வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை லேவியராகமம் 26:4 முதல் 12 வரை பார்க்க முடியும்.
· நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
· நான் உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்;
· நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணுவேன்.
· உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள் அவர்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
· உங்கள் தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்;
· நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்
· உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
· நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்
· பூமி தன் பலனை தரும்
· மரங்கள் தங்கள் கனியை கொடுக்கும். என்னும் அநேக ஆசீர்வாதங்களை உங்கள் முன் வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை நீங்கள் மட்டும் பெற்றுக்கொண்டவர்களாக இருக்கக்கூடாது. நம்மைச்சுற்றிலும், அநேக ஆபிரகாமின் குமாரரும் குமாரத்திகளும் சாத்தானால் கட்டுப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள். அவர்களை விடுவித்து நிமிர்ந்து நடக்க செய்வது நமது கடமையாக இருக்கிறது. லூக்கா 13: 11 முதல் 17 வரை 18 வருடமாய் கூனியாயிருந்த ஒரு ஸ்திரீயைக் குறித்து வாசிக்கிறோம். இயேசு அந்த ஸ்திரீயின் கட்டை அவிழ்த்து நிமிரச் செய்து, ஆபிரகாமின் ஆசிர்வாதத்திற்குள் பிரவேசிக்க செய்ததை வாசிக்கிறோம்.
ஆம் தேவனுடைய ஜனங்களே, நம்மை நிமிர்ந்து நடக்கச் செய்த தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து, ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசாரித்து, அவர் நமக்கென்று வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுவதுமட்டுமல்லாது, அநேகரை அந்த ஆசிர்வாதத்திற்குள்ளாக அழைத்து வருவோம். இயேசு விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்ந்து செய்ய நம்மை அர்பணிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
John Finny
Word of God Church
Doha – Qatar
www.wogim.org