எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதேயும் (Lead us not into temptation).

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,     தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,     ராஜ்யமும்,     வல்லமையும்,     மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே,     ஆமென்,     என்பதே (மத். 6:13). 

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fyCxAsJGkVo

பிசாசுக்குச் சோதனைக்காரன் என்ற ஒரு பெயர் காணப்படுகிறது. அவன் ஒரு சுங்க அதிகாரியைப் போல அவன் விரும்புகிறவர்களைச்  சோதிப்பான். அவனுக்கு அந்த அதிகாரத்தைத் தேவன் கொடுத்திருக்கிறார். இயேசு மனுஷகுமாரனாய் இந்த பூமியில் காணப்பட்ட நாட்களில்,     அவர் ஞானஸ்நானம் பெற்ற உடன்,     பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.  அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் ஜெபத்திலும்,     உபவாசத்திலும் காணப்பட்டபின்பு,     சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து அவரைச் சோதித்தான் (மத். 4:1-3) என்று வேதம் கூறுகிறது. அவன் இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலைப்  பொருளாசையினாலும்,     மேட்டிமையினாலும் சோதித்து விழத்தள்ளினான். மாம்சீக இச்சையைத் தூண்டிவிட்டு தாவீதை சோதித்தான். பண ஆசையைக் காட்டி இயேசுவின் சீஷனாய் காணப்பட்ட யூதாசை சோதித்தான். தெசலோனிக்கேயா சபை விசுவாசிகளுக்கு உபத்திரவத்தைக் கொடுத்துச் சோதித்தான்,     உடனே பவுல் சோதனைக்காரன் அவர்களைச்  சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று அறியும் படிக்கும்,     அவர்கள்  அசைக்கப்படாதபடிக்கு   அவர்களைத் திடப்படுத்தவும்,       விசுவாசத்தைப்பற்றி அவர்களுக்கு புத்தி சொல்லவும்   தீமத்தேயுவை அனுப்பினான். ஆனால் அவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிற்பதை அறிந்து பவுல் அவர்களை மெச்சினான். இப்படி பல விதங்களில் பிசாசு சோதிக்கிறவன். ஆகையால் கர்த்தருடைய ஜனங்கள்,     அவனுக்கு இடம் கொடுத்து விடாதிருங்கள். அவனுடைய காரியங்கள் உங்களில் இராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமலும்,     வங்கிகளில் கடனுதவி பெற்றுத் திரும்பச் செலுத்தாமலும் காணப்பட்டால் கர்த்தருடைய வருகையில் பரலோகம் செல்ல முடியாது.  பிசாசு இப்பிரபஞ்சத்தின் அதிபதியாய் காணப்படுவதினால் அதையே காட்டி உங்களைக்  குற்றப்படுத்தித் தடைசெய்து விடுவான்.

நாம் ஆராதிக்கிற தேவன் நம்மைச் சோதனைகளுக்குத் தப்பிப் போகும் படிக்குச் செய்கிறவர். சீமோன் பேதுருவையும்,     மற்ற சீஷர்களையும்  பார்த்து இதோ,     கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.  நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன் என்றார். பிலதெல்பியா சபையின் ஜனங்களுக்கு இயேசு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார்,  என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்ட படியினால்,     பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன் என்பதாக. கர்த்தருடைய பிள்ளைகளே,     சத்துரு பலமுறை உங்களைச்  சோதனைகளுக்குள் உட்படுத்தி அழித்து விடும் படிக்கு எண்ணினான். ஆனால் உங்களுக்காகப் பிதாவின் வலது பாரிசத்திலிருந்து இயேசு வேண்டுதல் செய்கிறவராய் காணப்படுவதினால்,     அனேக கண்ணிகளுக்கும்,     சோதனைகளுக்கும் நீங்கள் தப்பியிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதிருங்கள். ஒருநாள் ஆண்டவருடைய சீஷரில் ஒருவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே,     யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்ததுபோல,     நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். ஆண்டவர் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று சொல்லி மாதிரியின் ஜெபத்தை கற்றுக் கொடுத்தார். அதில் சோதனைக்குட்படப்பண்ணாமல்,     தீமையினின்று எங்களை காத்து இரட்சித்துக்கொள்ளும் என்றும் வேண்டும் படிக்குக் கற்றுக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகள் நீங்கள் ஜெபிக்கும் போதும் கூட,     ஆண்டவரே எங்களை சோதனைக்குட்படாமல் காத்துக் கொள்ளும் என்று ஜெபியுங்கள். பள்ளி,     கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகள்,     வாலிபர்களுக்கு முன்பாக பலவிதமான சோதனைகளை,     சத்துரு நண்பர்கள் மூலமாயும்,     ஸ்மார்ட் டிவைசஸ்(ளுஅயசவ னுநஎiஉநள)  மூலமும் வைக்கிறான்.  பலவிதமான சோதனைகளினால் பெரியவர்களையும் சோதிக்கிறான். எங்களை சோதனைக்குட்படாமல் காத்துக் கொள்ளும் என்று நீங்கள் அனுதினமும் ஜெபிக்கும் போது கர்த்தர் உங்களைக் காத்துத் தப்பப்பண்ணுவார்,     உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *