அப் 7:10. தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/5GdAs27UTls
அடிமையாய் விற்கப்பட்ட யோசேப்பின் வாழ்க்கையில் உயர்வும், அதிகாரமும் வருவதற்கான இரண்டு முக்கியமான காரியங்களை ஸ்தேவான் ஆலோசனை சங்கத்தில் உட்காந்திருந்த அநேகருக்கு முன்பாக எடுத்து உரைத்தான். எகிப்தின் இராஜாவாகிய பார்வோன் தனக்கு அடிமையாக அநேகரை வாங்கியிருக்கலாம். அவனுடைய இராஜ்யத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அடிமைகள் இருந்திருக்கலாம். ஆனால் மற்றெல்லாருக்கும் கிடைக்காத ஆசிர்வாதத்தை கர்த்தர் யோசேப்பிற்கு கொடுத்தார். அது தேவனுடைய கிருபை. தகுதியில்லாத அடிமைக்கு தேவ கிருபை கிடைத்தது. அதுபோல பார்வோனின் இராஜ்யத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சாஸ்திரிகள், ஞானிகள், ஜோசியக்காரர்கள், ஆலோசனை சொல்பவர்கள் என்று அநேகர் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களெல்லாருக்கும் இல்லாத ஞானத்தை கர்த்தர் யோசேப்பிற்கு கொடுத்தார்.
யோசேப்பின் மூலம் தேவன் தன்னுடைய ஆளுகையை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தினார். யோசேப்பு ஒரு தரிசனத்தை கண்டான். சூரியனும், சந்திரனும், பதினோரு நட்சத்திரங்களும் அவனை வணங்கியது. அந்த சொப்பனத்தை கேட்ட அவனுடைய தகப்பன் யாக்கோபு, நானும் உன் தாயும், உன் சகோதரர்கள் அனைவரும் உன்னை வணங்க வேண்டுமா என்று சொல்லி அவனை கடிந்துகொண்டான். ஆனால் யோசேப்பு அந்த சொப்பனத்தை விசுவாசித்தான். அதற்காக காத்திருந்தான். அந்த சொப்பனம் நிறைவேற தன்னை ஆயத்தமாக்கிக்கொண்டான். கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுமளவும் கர்த்தருடைய வார்த்தை அவனை புடமிட்டது. பதிமூன்று வருடம் புடமிடப்பட்டான். பின்பு எகிப்து தேசம் அனைத்திற்கும் அவன் தான் இராஜா, அவன் தான் அதிகாரி, எகிப்திலுள்ள எல்லா பொக்கிஷங்களுக்கும் அவன் தான் தலைவன், உலகத்திலிருக்கும் எல்லாரும் தானியத்திற்காக யோசேப்பிடம் தான் செல்ல வேண்டும். சிங்காசனத்தில் மாத்திரம் பெயரளவிற்கு பார்வோன் இருந்தான். ஆனால் தேசம் முழுவதிலும் யோசேப்பின் உத்தரவு இல்லமால் ஒருவனும் தன் காலையோ கையையோ அசைக்கமுடியாத அளவிற்கு கர்த்தர் யோசேப்பை உயர்த்தினார். இன்றைக்கும் யோசேப்பின் மேலிருந்த தேவகிருபையும், கர்த்தருடைய ஞானமும் உங்கள் மேல் இருக்குமென்றால், நீங்கள் இருக்கிற இடத்தில் கர்த்தர் உங்களை உயர்த்துவார். கர்த்தர் அப்படிப்பட்ட கிருபையையும் ஞானத்தையும் அருள கருத்தோடு விண்ணப்பம் பண்ணுங்கள். அப்பொழுது யோசேப்பை உயர்த்தியவர் உங்களையும் உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org