சிறுமையும் எளிமையுமானவர்கள் (Poor and needy).

சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி,    அது கிடையாமல்,    அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது,    கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து,    இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசாயா 41:17).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VPqafmXF_LA

நம் தேவன் சிறுமையும்  எளிமையுமானவர்களின்  கூப்பிடுதலைக் கேட்கிறவர். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கத் தேவன்,    இயேசுவை அபிஷேகம் பண்ணி அனுப்பினார். உலகம் இப்படிப்பட்டவர்களுக்கு தன் முகத்தை மறைக்கிறது,    அவர்களைச் சாபமாய் பார்க்கிறது. ஆனால் கர்த்தர் அப்படிப்பட்டவர்களை ஒருநாளும் கைவிடுவதில்லை,    குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி,    அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து,    அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும்,    கோணலைச் செவ்வையுமாக்குவேன்,    இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து,    அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா. 42:16) என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை,    ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்றும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.

ஆபிரகாம்,    ஒருநாள் ஆகாரிடம் அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் கொடுத்து,    பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து,    தன் வீட்டிலிருந்து வெளியேற்றினான். அவள் புறப்பட்டுப்போய்,    பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு,    அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,     பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று,    எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து  ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே,    உனக்கு என்ன சம்பவித்தது,    பயப்படாதே,    பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு,    போய்,    துருத்தியிலே தண்ணீர் நிரப்பி,    பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவர்கள் நாவு வறண்டு போய் சாகாதபடிக்கு, அவர்களின் கூக்குரலைக் கேட்டு பதில் அளித்தார். ஆபிரகாமால் ஒரு துருத்தியளவு தண்ணீரைத் தான் தரமுடியும். ஆனால் பரலோகத்தின் தேவன் துரவைக் கட்டளையிடுவார். உலகத்தின் ஜனங்களால்  ஓரளவுக்குத்தான் உங்களுக்கு உதவி செய்யமுடியும். ஆனால் தேவன் சிறுமையும் எளிமையுமானவர்களை ஒருநாளும் கைவிடுவதில்லை. 

கர்த்தருடைய பிள்ளைகளே,    சிறுமையும்,    எளிமையானவர்களையும்,    திக்கற்றவர்களையும்,    விதவைகளையும் நீங்கள் விசாரித்து உதவி செய்யும் போது,    இயேசுவையே விசாரிக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கர்த்தருடைய வருகையில்,    சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படும் போது,    மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும்  வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,     செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும்,    வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது,    அவர் தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,    உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன்,     எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன்,    என் தாகத்தைத் தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன்,    என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்,    வஸ்திரமில்லாதிருந்தேன்,    எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன்,    என்னை விசாரிக்க வந்தீர்கள், காவலிலிருந்தேன்,    என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.  அப்பொழுது,    நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே,    நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?  எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?  எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு,    உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு அவர் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ,    அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். ஏழை,    எளியவர்களுக்கு உதவி செய்பவர்களை; கர்த்தர் ஒருநாளும் கைவிடுகிறதில்லை. யோபு தன்னுடைய உபத்திரவத்தின் நாட்களில்,    அவனை விசாரிக்க வந்த நண்பர்கள் கூட அவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசின போது,    அவன் தன் உத்தமத்தைக் குறித்து அவர்களுக்கு விளக்கினான். எளியவர்கள்  வாஞ்சித்ததை  நான் கொடாதிருந்து,    விதவையின்  கண்களைப்  பூத்துப்போகப்பண்ணி,    தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல்,    நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?  என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்,    நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகு கொடுத்து நடத்தினேன். ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும்,    ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,     அவன் என்  ஆட்டுமயிர்க்  கம்பளியினாலே  அனல் கொண்டதினால்,    அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,     ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு,    திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,     என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து,    என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக. பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை,     வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன் என்று கூறினான். ஆகையால் கர்த்தர் அவன் இழந்ததை எல்லாம் இரட்டிப்பாய் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். நீங்கள் ஏழைகளை விசாரிக்கும் போது,    உங்கள் கடினமான நேரங்களில் கர்த்தர் உங்களை நினைத்தருளி,    இரட்டிப்பான நன்மைகளைத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *