ஒருவருக்கொருவர் கனம் பண்ணுங்கள் (Honor one another).

சகோதர சிநேகத்திலே  ஒருவர்மேலொருவர்  பட்சமாயிருங்கள்,  கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள் (ரோமர் 12:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kzAvs4Mpkls

கர்த்தருடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கனம் பண்ணவேண்டும். ஊழியக்காரர்கள் விசுவாசிகளை கனத்திற்குரிய பாத்திரங்களாய் கருத வேண்டும். விசுவாசிகள்  திருவசனத்திலும்  உபதேசத்திலும்  பிரயாசப்படுகிறவர்களை,     இரட்டிப்பான கனத்திற்குப்  பாத்திரராக  எண்ணவேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களைக் கனம் பண்ண வேண்டும். தேசத்தின் குடிகள் ஆளுகையில் காணப்படுகிறவர்களை  கனம்பண்ண வேண்டும். வேலைக்காரர்கள் எஜமான்களைக் கனத்திற்குரிய பாத்திரங்களாய் கருதவேண்டும். கனம் பண்ணுவதில்  மற்றவர்களைப் பார்க்கிலும் நாம் முந்திக் கொள்ளவேண்டும் என்று ஆவியானவர் ஆலோசனைக் கூறுகிறார்.

உலகத்தில் காணப்படுகிறவர்கள் தாங்கள்தான் கனத்திற்குரியவர்கள் என்று கருதுவதுண்டு. இரண்டு மனுஷர் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்@ ஒருவன் பரிசேயன்,     மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர்,     அநியாயக்காரர்,     விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும்,     இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்று தன்னையே உயர்த்துகிறவனாய் காணப்பட்டான்,     ஆயக்காரனை அற்பமாகப் பார்த்தான். நாமும் அனேக வேளைகளில் நம்முடைய ஐசுவரியம்,      தாலந்துகள்,     வரங்கள்,     கிருபைகளை வைத்து மற்றவர்களை அற்பமாய் கருவது உண்டு.  நம்மைக் காட்டிலும் மற்றவர்களை யாரும் கனம் பண்ணக் கூடாது என்று கருதுபவர்களும் உண்டு. தாவீது கோலியாத்தைக்  கொன்று திரும்பி வரும்போதும்,     ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து,     ஆடல்பாடலுடன் புறப்பட்டு,     மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்து சவுல் கொன்றது ஆயிரம்,     தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை முறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது, அவன் மிகுந்த  எரிச்சலடைந்து,      தாவீதுக்குப் பதினாயிரம்,     எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள், இன்னும் ராஜாங்க மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,      அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான் என்று வேதம் கூறுகிறது. நாம் சவுலைப் போலக்  காணப்படலாகாது. ஊழியங்களின் பாதைகளிலும் மற்றவர்கள் அதிக கனத்தைப் பெறும் போது,     பொறாமை கொள்ளக் கூடாது. மிரியாமும்,      ஆரோனும்  மோசேக்கு விரோதமாய் பேசி,      கர்த்தர்  மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ,     எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது,     மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்ட ரோகியானாள்,      ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது,     அவள் குஷ்ட ரோகியாயிருக்கக் கண்டான். ஊழியத்தில் மற்றவர்களைக் கர்த்தர் பயன்படுத்தும் போது,     அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசொல்ல வேண்டும்,     அவர்கள் தொடர்ந்து அழைப்பில் நிற்பதற்கு ஜெபம் செய்ய வேண்டுமே ஒழியப் பொறாமையோடு பார்க்கலாகாது.

கர்த்தருடைய பிள்ளைகளே,     மற்றவர்களை நாம் கனத்திற்குரியவர்களாய் கருதுவதற்கு நமக்குள் தாழ்மை காணப்படவேண்டும். கிறிஸ்து இயேசுவிலிருந்த தாழ்மையின் சிந்தை நமக்குள்ளும் இருக்க வேண்டும். அனேக வேளைகளில் ஆண்டவருக்கு கனத்தையும்,     மகிமையையும் செலுத்துவோம்,     அது நல்லது. ஆனால் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்களை கனவீனம் பண்ணுவோம். ஆஸ்தி,     ஐசுவரியங்கள் உள்ளவர்களையும்,     உயர்ந்த ஸ்தானங்களில் காணப்படுகிறவர்களையும் பொதுவாக நாம் கனம் பண்ணுவோம். ஆனால் ஏழைகளைக் கனவீனம் பண்ணுவோம். ஆனால் வேதம் நாம் எல்லோரையும் கனம் பண்ண வேண்டும் என்று கூறுகிறது. கர்த்தரையும்,     அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்களையும் நீங்கள் கனம் பண்ணும் போது,     கர்த்தர் உங்களை கனம் பண்ணி,     உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *