நான் உனக்குத் துணைநிற்கிறேன்(I Myself will help you).

யாக்கோபு என்னும் பூச்சியே,    இஸ்ரவேலின் சிறுகூட்டமே,    பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்(ஏசாயா 41:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/l0x0Ez0ugb0

பூமி முழுவதும் பயங்களும்,    திகில்களும் சூழ்ந்திருக்கிற இந்த நாட்களில்,    பயப்படாதே,    நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தர் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்,    அவர் அவருடையவர்களைப் பாதுகாக்கத் திராணியுள்ளவர். கர்த்தருடைய பிள்ளைகள் பயப்படுகிறவர்களாய் காணப்படக் கூடாது. பயமும் விசுவாசமும் ஒன்றுக்கொன்று எதிரானது. ஆகையால் இப்படிப்பட்ட யுத்தங்கள் நடக்கிற காலகட்டத்தில்,    நிர்விசாரத்தையும்,    லௌகீக கவலைகளையும் உதறிவிட்டு கர்த்தரை அதிகமாய் தேட உங்களை அர்ப்பணியுங்கள். இனிச் சம்பவிக்கப்போகிறவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி,    மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு,    எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.  உலக ஜனங்களின் பார்வையில் ஜீவனுள்ள தேவனைப் பின்பற்றுகிற ஆவிக்குரிய இஸ்ரவேலராய் காணப்படுகிற நாம் ஒரு  தெள்ளுப்ளுப் பூச்சியைப் போலவும்,    புழுவைப் போலவும்  அற்ப்பமாய் காணப்பட்டாலும்,    நம்மை மீட்டெடுத்த ஆண்டவருடைய பார்வையில் விஷேசித்தவர்களாய் காணப்படுகிறோம். இயேசுவும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில்,    நானோ ஒரு புழு,    மனுஷனல்ல,    மனுஷரால் நிந்திக்கப்பட்டும்,    ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன் என்றதை,    மேசியாவைப் பற்றி எழுதப்பட்ட சங்கீதம் 22ல் வாசிக்கிறோம். சவுல் ராஜா தாவீதை துரத்திக் கொண்டு வந்த வேளையில்,    தாவீது இஸ்ரவேலின் ராஜா ஒரு   தெள்ளுப்பூச்சியைத் தேட வந்தாரோ என்று தன்னைத் தாழ்த்தினான். பின்னாட்களில் அவன்தான்  சவுலுக்குப்  பதிலாகச் சமஸ்த  இஸ்ரவேலின் மேல் ராஜாவாகக் காணப்பட்டான். கர்த்தர் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறவர்,    தன்னைத்தான் தாழ்த்துகிற எவரையும் அவர் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

யூதாவின் ராஜாவாகிய ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான். அவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது. அப்போது,    அவர்களுக்கு விரோதமாக  எத்தியோப்பியனாகிய  சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும்  வந்தான்.  ஆசா  அவனுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டான்,     ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே,    பலமுள்ளவனுக்கானாலும்  பலனற்றவனுக்கானாலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம், எங்கள் தேவனாகிய கர்த்தாவே,    எங்களுக்குத் துணைநில்லும்,    உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்,    கர்த்தாவே,    நீர் எங்கள் தேவன்,    மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடா தேயும் என்று ஜெபித்தான்.  அப்பொழுது கர்த்தர் அவனுக்குத் துணைநின்று,    அந்த  எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள். ஆசாவைப் போல நீங்களும்,    ஆண்டவரே எனக்குத் துணைசெய்யும் என்று உங்கள் இக்கட்டான வேளையில் வேண்டுதல் செய்யும் போது கர்த்தர் உங்களுக்குத் துணைநின்று உங்களை விடுவிப்பார். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,    ஆபத்துக்காலத்தில்  அனுகூலமான துணையுமானவர் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் பலமுள்ளவர்களாய் பலனற்றவர்களாய்,    யாராயிருந்தாலும் கர்த்தர் உங்களுக்குத் துணைநின்று உதவிசெய்வார்.  ஆகையால் பயப்படாமலும் கலங்காமலும் காணப்படுங்கள்,    இந்த மாதம் முழுவதும் கர்த்தர் உங்களுக்குத் துணை நின்று உங்களை நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *