1 சாமு 2:10. கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/X-82kCY7Qxo
அன்னாள் அநேக வருடம் காத்திருந்து ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்த பிறகு, என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது என்று அவள் அநேக காரியங்களை சொல்லி கர்த்தரை துதித்தாள். காத்திருந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போதோ, சரீரத்தில் இருக்கும் நோய் நீங்கும்போதோ, கடன் பிரச்சனை மாறும்போதோ, நாமெல்லாரும் கர்த்தர் எனக்கு அற்புதம் செய்தார் என்று சொல்லுபவர்களாக காணப்படுவோம். ஆனால் அன்னாள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தபிறகு முதலாவது கர்த்தரை துதித்த விதம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவள் சொல்லுகிறாள் கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை என்பதாக. என்னை ஆசிர்வதித்த என் கர்த்தர், என் கண்ணீரை மாற்றின என் கர்த்தர், என் வேண்டுதலை கேட்ட என் கர்த்தர், பரிசுத்தர் என்று முதலாவது கர்த்தருடைய பரிசுத்தத்தை உயர்த்துகிறவளாக காணப்பட்டாள். நாமும் பரிசுத்தமுள்ள நாமத்தையுடையவரை, பயபக்தியோடு துதிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.
தொடர்ந்து அவள் துதிக்கும்போது சொல்லுகிறாள் கர்த்தர் ஞானமுள்ள தேவன் என்பதாக. எனக்கு என்ன காரியம், எப்பொழுது வேண்டும் என்பதை நன்றாக அறிந்த அனந்த ஞானமுள்ளவர் என் கர்த்தர் என்று சொல்லி துதிக்கிறாள். நாம் காண்கிற அண்ட சரசாரங்களை பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவு ஞானமாய் ஆகாயம், பகல், இரவு, பறவைகள், மீன்கள், தாவரங்கள், மலைகள், கடல் போன்றவற்றை படைத்தார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். நம் ஆண்டவர் ஞானத்தின் உறைவிடமாக காணப்படுகிறார்.
மாத்திரமல்ல, அவள் சொல்லுகிறாள், அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார் என்பதாக. அற்பமாய் எண்ணப்பட்ட நம்மை கர்த்தர் புழுதியிலிருந்து எடுத்து உயர்த்தினார்.
கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயம் தீர்ப்பார் என்றும் துதிக்கிறாள். நம் ஆண்டவர் நியாயாதிபதி; வெள்ளை சிங்காசனத்தில் அமர்ந்து சகல இராஜாக்கள், பிரபுக்கள், ஆளுகிற தலைவர்கள், இராணுவ தளபதிகள், பெரிய தொழில் அதிபர்கள் தொடங்கி உலகத்தின் அணைத்து மனிதர்களையும் நியாயம் விசாரிக்கிற தகுதியை பெற்றவர் என்பதை அறிந்து, அன்னாளை போல நாமும் கர்த்தரை துதிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.
அவள் அழுது ஜெபித்தபோது ஒரே ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். எப்பொழுது கர்த்தரை துதித்து, அவருக்குள் களிகூர்ந்தாளோ, அதன் பிற்பாடு, அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள். முதலாவது பெற்ற நன்மையை பார்க்கிலும் அவள் கர்த்தரை துதித்த பிறகு பெற்றுக்கொண்ட நன்மைகள் அதிகம். ஆகையால் நீங்களும் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை துதியுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org