தெபொராள் மற்றும் பாராக்கின் பாட்டு (Song of Deborah and Barak):-

நியா 5:12,13 விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ. மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UC4sVsrdIw0

தெபொராள் ஒரு தீர்க்கதரிசி, நியாயாதிபதி மாத்திரமல்ல அவள் ஒரு ஆராதனையை நடத்தும் கிருபையையும் பெற்ற நல்ல பாத்திரம். இன்றும் உலகத்திலிருக்கும் அநேக ஸ்திரீகளுக்கு நல்ல முன் உதாரணமாய் இருக்கும் கர்த்தருடைய ஊழியக்காரி என்பதில் சந்தேகமில்லை. அவள் சொல்லுகிறாள் நான் கர்த்தரைப்பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன் என்பதாக. சத்துருவின் மீது ஜெயம் கிடைத்தவுடன், அநேக வேளைகளில் நாம் ஜெயம் கொடுத்த கர்த்தரை மறந்துவிடுகிறோம். ஆனால் தெபொராள் ஜெயம் கொடுத்த கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணுகிறாள்.

இப்படியாக அவள் பாடிக்கொண்டு வரும்போது மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே (நியா 5:23) என்று சொல்லுகிறாள். அவள் பாடும்போது ஒரு கோத்திரத்தை சபிக்கும்படி சொன்னாள். ஏன், அந்த மேரோசின் குடிகள் அப்படி என்னதான் செய்தார்கள் என்று கேட்டால், அதற்கான பதில், அந்த ஜனங்கள் வேசித்தனம், விபச்சாரம் போன்ற பாவத்தை செய்யவில்லை; அந்த ஜனங்கள் குடிவெறியினால் மயங்கி இருக்கவில்லை; அந்த ஜனங்கள் பிறரை அநியாயமாய் நடத்தவில்லை, தீங்கு ஒன்றும் செய்யவில்லை. அப்படியென்றால், ஏன் மேரோசை சபிக்கும்படியாக தெபொராள் பாட்டு பாடினாள் என்றால், அவர்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தது தான் காரணம்; அதாவது கர்த்தருடைய ஜனங்களுக்கு துணையாக யுத்தத்திற்கு வராமல் இருந்தது தான் அவர்கள் செய்த பாவம் என்று தெபொராள் கூறுகிறாள். பாவத்தில் இரண்டு வகை உண்டு; அதில் ஒன்று செய்யக்கூடாததை செய்வது, மற்றொன்று செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டுவிடுவது. மேரோசின் குடிகள் செய்ய வேண்டியதை செய்யாமல், கர்த்தருக்காக யுத்தத்தை செய்யாமல் சும்மா இருந்துவிட்டது தான் அவர்கள் செய்த பாவமாய் காணப்படுகிறது.

இன்றைய நாட்களில் இதே சூழ்நிலையில் அநேக சபையில் ஆவிக்குரிய யுத்தம் செய்ய அநேக ஜனங்கள் இணையாமல், மேரோசின் குடிகளை போல சும்மா இருந்துவிடுவதை நாம் பார்க்கிறோம். இணைந்து ஜெபிக்க முடியவில்லை, இணைந்து கர்த்தருடைய பணியை செய்ய மனது வருவதில்லை. வாரம் ஒரு நாள் சபைக்கு போனால் போதும், ஆவிக்குரிய யுத்தத்தை செய்ய நாங்கள் எங்களை இணைத்துக்கொள்ளுவதில்லை என்று சொல்லுகிற ஏராளமான கிறிஸ்தவர்கள் உண்டு. அப்படியாக இல்லாமல் தெபொராள், பாரக்கை போல முன்னின்று ஆவிக்குரிய யுத்தத்தை செய்வதற்கு ஆயத்தமாகுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகையை தருவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *