“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவா.14:27)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IZP4zqWxDXI
இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போகுமுன் தன் சீஷர்களோடு பேசியபோது மேற்கண்ட வசனத்தைக் கூறுகிறார். இந்த அதிகாரத்தின் முதல் வசனம் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்று துவங்குகிறது. ஆம் தேவ ஜனங்களே, இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்குள்ளும் ஒரு கலக்கம், துக்கம், சந்தோஷமின்மை, வெறுப்பு, பயம் இவையே இருதயத்தை நிரப்பி வைத்திருக்கிறது. ஆனால் இயேசு சொல்லுகிறார் என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று. ஆம் அவரே சமாதானக் கர்த்தர்! (ஆதி. 49:10). அவரே சமாதானப்பிரபு!! (ஏசாயா 9:6). அவரே சமாதான காரணர்!!! (மீகா 5:5).
அந்த இயேசுவே “சமாதான பிரபுவாக” இந்த பூமியில் அவதரித்தார்.
இயேசு பூமியில் வாழ்ந்தபோது சமாதானத்தை மற்றவர்களுக்கும் கொடுத்தார். ஒருநாள் ஒரு பாவியாகிய ஸ்திரீ இயேசுவண்டை வந்தபோது, இயேசுவோ அவளுடைய பாவங்களையெல்லாம் மன்னித்து, “சமாதானத்தோடே போ” என்று அனுப்பி வைத்தார். இதை லூக்கா 7:37 to 50 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். மற்றொருமுறை பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்த ஒரு ஸ்திரீ, இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு சுகம் பெற்றபோது, இயேசுவோ அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்று அனுப்பிவைத்தார். இதை லூக்கா 8: 43-48ல் வாசிக்கிறோம்.
இத்துடன் தன் பணியை முடித்துவிடாமல், தன்னுடைய சீஷர்களைப் பார்த்து “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். அந்த வாக்கின்படியே தமது மரணத்தினால், சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உருவாக்கினார். இதை ஏசாயா 53:5ல் நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொலோசெயர் 1:20ல் அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் தேவ ஜனங்களே, சமாதான பிரபுவாய் வந்த இயேசு, சமாதானத்தை மற்றவர்களுக்கு கொடுத்ததுமன்றி, அதே சமாதானத்தை அவரை விசுவாசிக்கிற எல்லோருக்கும் சிலுவையின் மூலம் தம்முடைய இரத்தத்தின் மூலம் சம்பாதித்து வைத்து சென்றுள்ளார்.
அவ்வாறு சம்பாதித்து வைத்துள்ள சமாதானத்தைப் நாம் எப்படி பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.
முதலாவதாக; கடினமான நேரங்களில் இயேசுவின் பாதத்திலிருந்து அவருடைய முகத்தை நம்பிக்கையோடு தேடும்போது ஒரு மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் நிரப்பும். வேதம் கூறுகிறது, “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6,7)
இரண்டாவதாக; பவுல் கூறும்போது, நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார் என்று (பிலிப்பியர் 4:9). இங்கே பவுல் கிறிஸ்துவை தன் சரீரத்தில் தரித்துக்கொண்டு, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவராய் இருந்தார். ஆதலால்தான் பவுல், நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் ( I கொரிந்தியர் 11:1.) என்று உறுதியாக கூறமுடிந்தது. சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்துவை மாதிரியாக வைத்து நாம் செயல்படும்போது சமாதானத்தின் தேவன் நம்மோடிருப்பார்.
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார்” (சங்கீதம் 29:11). உலகத்தில் உள்ள எல்லோருமே கர்த்தராகிய இயேசுவின் பிள்ளைகள்தான். ஆனால், யார் யாரெல்லாம் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, நீதியுடனும் நேர்மையுடனும் வாழுகிறார்களோ அவர்களையே தேவன் தமது ஜனம் என்று அழைக்கிறார். அவர்களே சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். எனவேதான் கர்த்தர் சொல்லுகிறார், நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும் என்று (ஏசாயா 32 : 17,18)
இதை வாசிக்கிற ஒவ்வொருவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றி அவர் கொடுக்கும் சமாதானத்தைப் பெற்றுக்கொள்வோம்.
John Finny
Word of God church
Doha – Qatar
www.wogim.org