கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று (ஏசா. 40:5).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5Xd7eAt6_o4
கர்த்தருடைய மகிமை வெளியரங்கமாய் வெளிப்படுகிற நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் காணப்பட்ட வேளையில் தேவன் அக்கினி ஸ்தம்பமாய், மேகஸ்தம்பமாய் வெளிப்பட்டதை அத்தனை பேருடைய கண்களும் கண்டது. சீனாய் மலையில் அவர் இறங்கி வந்த போதும், மலை முழுவதும் அக்கினி, புகைக்காடாய் காணப்பட்டதை இஸ்ரவேல் சபைக் கண்டது. அதுபோல ஆண்டவருடைய பிரத்தியட்சமான பிரசன்னத்தை நம்முடைய ஜீவியத்தில், குடும்பங்களில், சபைகளில் காண்கிற நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது. இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் படிக்கு அவருக்கு முன்பாக வந்த யோவான்ஸ்நானகன், இயேசுவின் ஊழியத்தின் விளைவு, அவருடைய மகிமையின் வெளிப்பாடாய் காணப்படும் என்று தீர்க்கதரிசனமாய் கூறினார். சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் இந்த கடைசி நாட்களில் கர்த்தருடைய மகிமையின் பிரசன்னம் நம் வாழ்க்கையிலும், ஊழியங்களிலும் அதிகமாக வெளிப்பட வாஞ்சியுங்கள்.
மோசே தேவனுடைய சமூகத்தை அதிகமாய் விரும்பினான். அவன் கர்த்தரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால், என்னையும் என் ஜனங்களையும் இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும். எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும், நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின் மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன், என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணுவேன் என்றும் வாக்குக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய பிரசன்னத்தையும், சமூகத்தையும் வாஞ்சிக்கும் போது, கர்த்தர் அவருடைய தயையை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார். அவருடைய தயவு உங்களை உயர்த்தும், உங்களை வாழவைக்கும்.
அப்போஸ்தலர்களுடைய நாட்களில் சபைகளில் தேவ பிரசன்னம் அதிகமாய் காணப்பட்டது. ஏறக்குறைய நூற்றியிருபது பேர் ஒரு மனதோடு கூடிவந்த இடத்தில் கர்த்தருடைய ஆவியானவருடைய பிரசன்னம் அளவில்லாமல் இறங்கினது. பேதுருவும் யோவானும் தேவாலயத்திற்குப் போனபோது, தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனை இயேசுவின் நாமத்தில் எழுந்து நடக்கும் படிக்குச் செய்தார்கள். அனனியா, சப்பீரா என்ற குடும்பம் சொன்ன ஒரு பொய்யின் நிமித்தம் தேவசமூகத்தில் விழுந்து ஜீவனை விட்டார்கள். அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும் கூடிவந்து ஜெபித்தபோது, அந்த இடம் அசையத் தக்கதாய் தேவப் பிரசன்னம் அவர்களை நிரப்பியது. கடைசி நாட்களில் கர்த்தருடைய மகிமை வெளியரங்கமாய் வெளிப்படும் என்று கர்த்தருடைய வார்த்தை வெளிப்படுத்தியிருந்தும் நம்மால் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கமுடியவில்லை, தேவனுடைய பிரத்தியட்சமான பிரசன்னத்தை உணரமுடியவில்லை, அதற்குக் காரணம் பரிசுத்த ஸ்தலத்தில் அசுத்தங்கள் காணப்படுகிறது. தேவன் சிநேக்கிற பரிசுத்தம் நம்மில் இல்லை. அவர் எதிர்பார்க்கிற நீதியின் ஜீவியம் செய்யவில்லை. எசேக்கியேலின் நாட்களில், ஒருநாள் ஆண்டவர் அவனைப் பார்த்து, நீ தேவாலயத்தின் சுவரிலே துவாரமிடு என்றார், அவன் சுவரிலே துவாரமிட்டபோது, அங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைக் கண்டான், சகலவித ஊரும் பிராணிகளும், அருவருப்பான மிருகங்கள், நரகலான சகல விக்கிரகங்களுக்கு முன்பாக ஜனங்கள் நின்றார்கள், தம்மூசுக்;காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகளையும், சூரியனை நமஸ்கரித்த புருஷர்களையும் கண்டான், அவர்களின் நடுவிலே ஆசாரியர்கள் அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று, தேவாலயத்தில் தேவப்பிரசன்னத்தின் புகை எழும்புவதற்குப் பதிலாக, செயற்கை புகை எழும்புகிறது. இந்நாட்களிலும் அனேக சபைகளில் கூச்சலும் கொண்டாட்டமும் செயற்கை புகைகளும் காணப்படுகிறது, ஆனால் உண்மையான தேவப்பிரசன்னமும், தேவனும் இல்லை. வாஞ்சையோடும், தாழ்மையோடும் கர்த்தரையும், அவருடைய சமூகத்தையும் தேட உங்களை அர்ப்பணியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar