அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். (மாற்கு 10:47).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/iV3deB6qLEE
பர்திமேயு என்று குருடன் எரிகோவின் வீதிகளில் உட்கார்ந்து பிச்சை கேட்கிறவனாய் காணப்பட்டான். அவன் எத்தனை வயதுள்ளவன், எவ்வளவு நாட்கள் குருடனாய் காணப்பட்டான், எத்தனை நாட்களாய் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான் என்பது எழுதப்படவில்லை. ஒரு நாள் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டான். அந்த தருணத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்தான். சகேயுவும் அதே எரிகோவின் வீதிகளில் இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்ட உடன், அந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவர் எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகைதேடி, காட்டத்தி மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான், அதினிமித்தம் இயேசு அவனை அன்று ஆபிரகாமின் குமாரனாய் மாற்றினார். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் தேவைகளைச் சந்திக்க ஒரு நேரத்தை வைத்திருக்கிறார். உங்களை சந்திப்பதற்கு ஒரு காலத்தை அவர் வைத்திருக்கிறார். அந்த நேரத்தை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஒரு நாளும் தவறவிட்டுவிடாதிருங்கள். எருசலேம் பட்டணத்தின் குடிகள், இயேசு அவர்களைச் சந்திக்கும் காலத்தை அறியாமல் போனபடியால் அவர்களுக்காகக் கர்த்தர் கண்ணீர் விட்டு அழுதார். எருசலேமின் குடிகளைப் போல நீங்கள் காணப்படாதிருங்கள்.
பர்த்திமேயு, இயேசு வருகிறார் என்று விசாரித்து அறிந்த உடன், இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். இயேசுவைத் தவிர அவனுடைய கடினமான சூழ்நிலையில் அவனை விடுவிக்க வேறு ஒருவராலும் முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். இயேசு இரக்கமும் மனதுருக்கமும் உள்ளவர் என்பதையும் அறிந்திருந்தான். ஆகையால் எனக்கு இரங்கும் என்று சத்தமாகக் கூப்பிடத் துவங்கினான். கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசு இரக்கமுள்ளவர், ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவர். ஆகையால் உங்கள் தேவைகள் ஏதுவாய் காணப்பட்டாலும் அவரிடம் சொல்லிவிடுங்கள். அவர் நிச்சயமாய் உங்களுக்கு உதவிசெய்வார். பர்த்திமேயு பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள், ஆனால் அவன் இன்னும் அதிகமாய் தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். உங்கள் சூழ்நிலைகளைக் கண்டு, அனேகர் இனி நீங்கள் உங்கள் பிரச்சனைகளோடு தான் காணப்படமுடியும் என்பதாய் நினைக்கலாம். அவ்விசுவாச வார்த்தைகளைப் பேசி உங்களைச் சோர்ந்து போகும் படிக்குச் செய்யலாம். ஆனால் உங்களின் சத்தத்தைக் கேட்க இயேசு ஆவலாய் காணப்படுகிறார் என்பதை மறந்து போகாதிருங்கள். ஆகையால் உங்கள் காரியங்கள் எல்லாவற்றையும் ஜெபத்திலே ஆண்டவரிடம் சொல்லிவிடுங்கள்.
பர்திமேயுவின் கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்ட ஆண்டவர் நின்றார். அவனை அழைத்து வரும்படிக்குச் சொன்னார். அவர்கள் அவனைப் பார்த்து திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்று அவனிடம் சொன்னார்கள். உடனே அவன் பிச்சைக்காரனுக்கு அடையாளமாய் காணப்பட்ட மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, விசுவாசத்தோடு இயேசுவிடத்தில் வந்தான். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் விசுவாசம் எப்படிப்பட்டதாய் காணப்படுகிறது? இருநினைவுகளோடு காணப்படுகிறீர்களா? திட்டம் ஒன்று, இரண்டு என்று மனதில் வைத்துக் கொண்டு ஆண்டவரிடத்தில் வருகிறீர்களா? பர்திமேயுவுக்குள் திடமான விசுவாசம் காணப்பட்டது. நான் இனி குருடனாகவும் பிச்சைக்காரனாகவும் காணப்படுவதில்லை என்று விசுவாசித்தான். ஆண்டவரிடத்தில் அவன் வந்த வேளையில், இயேசு அவனைப்பார்த்து நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். நாம் நம்முடைய காரியங்களை இயேசுவிடம் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் வேண்டிக்கொள்வதற்கு முன்பே, நமக்கு என்ன வேண்டும் என்று அவர் அறிந்திருந்தாலும், என்னுடைய பிள்ளைகள் என்னிடம் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார். பர்திமேயு, ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும் என்று கூறிய உடன், நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். காத்தரிடத்திலிருந்து நன்மையைப் பெற்றபின்பு, அவன் விரும்பின வழியில்; செல்லாதபடி, இயேசுவுக்கு பின்சென்று, அவருக்கு சீஷனாய் மாறினான். கர்த்தருடைய பிள்ளைகளே, சிறிதானதோ, பெரிதானதோ, கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்யும் போது, இன்னும் அதிகமாய் கர்த்தரைச் சேவியுங்கள், உத்தமமாய் ஆண்டவரைப் பின்பற்றுங்கள். கர்த்தரிடத்திலிருந்து சுகத்தைப் பெற்றபின்பு, நன்றிசொல்லத் திரும்பிவராமல் காணப்பட்ட ஒன்பது குஷ்ட ரோகிகளைப் போலக் காணப்படாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar