அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம் (Our light affliction which is for a moment).

அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம் (Our light affliction which is for a moment).

மேலும் காணப்படுகிறவை களையல்ல,       காணப்படாதவைகைள  நோக்கியிருக்கிற நமக்கு,      அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய  கனமகிமையை உண்டாக்குகிறது (2 கொரி. 4:17).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9-R294Q1Ucs

உபத்திரவங்களும்,      வேதனைகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. ஒரு நாள் ஆண்டவர் ஆபிரகாமைப் பார்த்து,      உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து,      அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும்,      அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும்,      நீ நிச்சயமாய் அறியக்கடவாய் என்றார். அந்த வார்த்தையின் படி இஸ்ரவேல் ஜனங்கள் நானூறு வருஷங்கள் எகிப்தில் அடிமைகளாய் காணப்பட்டார்கள். பார்வோன் ஆளோட்டிகளை வைத்து அவர்களை அதிகமாய் வேலைவாங்கி வேதனைப்படுத்தினான். ஆனால் அவர்கள் படும் உபத்திரவத்தைக் கர்த்தர் கண்ணோக்கிப் பார்த்து,      அவர்களை விடுவித்தார். பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் அவர்களை அழைத்து வந்து,      அவர்களை நாட்டினார். யோபு தன் வேதனையின் மத்தியில் சொன்னான்,      என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று,      என் குடல்கள் கொதித்து அமராதிருக்கிறது,      உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது என்பதாக. ஆகிலும் அவனுடைய உபத்திரவம் நிரந்தரமானதாயிருக்கவில்லை. கர்த்தர் அவனுடைய சூழ்நிலைகளை மாற்றி இரட்டிப்பான ஆசீர்வாதங்களைக் கொடுத்து அவனை மகிழப்பண்ணினார். சிமிர்னா சபையின் விசுவாசிகளைப் பார்த்து கர்த்தர் பேசும் போது,       படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே@ இதோ,      நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்,      பத்துநாள்  உபத்திரவப்படுவீர்கள்.  ஆகிலும்  நீ மரணபரியந்தம் உண்மையாயிரு,      அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் என்றார். 

கர்த்தருடைய பிள்ளைகளே,      உபத்திரவங்கள் நிரந்தரமானதல்ல,      அவைகளைக் கர்த்தர் அதிசீக்கிரத்தில் உங்கள் வாழ்க்கையிலிருந்து நீக்கிப் போடுவார். ஆகையால் உபத்திரவங்கள்,      பாடுகள்,      வேதனைகளின் பாதைகளில் கடந்து செல்லுகிறவர்களாய் காணப்படுவீர்கள் என்றால் சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் கடந்து செல்லுகிற தரித்திரங்களின் பாதைகளையும்,      வியாதிகளின் பாடுகளையும்,      தனிமை இழப்பு என்ற பலவிதமான வேதனைகளையும்  கர்த்தர் அதிசீக்கிரத்தில் மாற்றிப்போடுவார்.  இயேசு,      உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை ஒரு நாளும்  அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும்,      தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து,      தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளி,      அவனை விடுவிப்பார் என்று வேதம் கூறுகிறது. சங்கீதக்காரன் கூறினான்,      நான்  உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன்,      இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன் என்று. உபத்திரவங்கள் ஆண்டவருடைய சித்தத்தின் மையத்தில் நாம் வாழ்வதற்கு சில நேரங்களில் உதவிசெய்கிறது. ஆகையால்  அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவங்களைக் கண்டு பின்வாங்கி விடாதபடி தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் ஜெயமாய் ஓட உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கிருபை பாராட்டுவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *