எல்லா மனுஷருக்காகவும் ஸ்தோத்தரியுங்கள் (Giving of thanks be made for all men):-

1 தீமோ 2:1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/X55GTxz2czQ

ஆண்டவர் சொல்லுகிறார் எல்லா மனிதருக்காகவும் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க வேண்டும் என்பதாக. அப்படியென்றால் எங்கோ ஒருவர், நீங்கள் முன் பின் அறியாத நபர் மற்றவர்களை கொன்றதினிமித்தம், தீவிரவாதங்களை செய்தர்வர்களுக்காக, துன்மார்க்கமான காரியங்களை செய்தவர்களுக்காக ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. உங்கள் வாழ்வில் நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ தொடர்பில் இருக்கும் மனிதர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். இந்த வருடத்தில் அநேக மனிதர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்திருக்கக்கூடும். சபையில் நூற்றுக்கணக்கான விசுவாசிகள், வேலை ஸ்தலத்தில் நூற்றுக்கணக்கானோர், உறவினர்கள், நண்பர்கள் என்று பல மனிதர்கள், புதிதாக அறிமுகமான பல நபர்கள் என்று அநேகரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்திருக்கலாம். அவர்கள் எல்லாருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ வந்த மனிதர்கள் சிலர் நல்லவர்களாகவும், சிலர் உங்களுக்கு எதிர் மறையானவர்களாகவும் இருந்திருக்கக்கூடும். சிலர் உதவி செய்திருக்கலாம், சிலர் வெறுத்திருக்கலாம். இருந்தாலும் எல்லா மனிதருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். காரணம் வசனம் சொல்லுகிறது அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோம 8:28). நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இந்த வருடத்தில் சந்தித்த சகலவிதமான மனிதர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ யாராக இருந்தாலும், சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடந்திருக்கிறது. உங்களுக்கு நடந்தது எல்லாம் ஆண்டவருடைய சித்தத்தின்படி தான் நடந்திருக்கிறது. வேலை ஸ்தலத்தில் நல்ல அதிகாரிகள் உங்களுக்கு காணப்படுகிறார்களா , அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். வேலை ஸ்தலத்தில் கொடுமையானவர்களை சந்தித்தீர்களா, அவர்களுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்தரியுங்கள். உங்கள் மனைவி, கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள், சபையில் இருக்கும் அணைத்து விசுவாசிகளுக்காகவும், எல்லா காரியத்திற்கும் ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.

நேபுகாத்நேச்சார் என்னும் இராஜா மனம் திரும்பியபிறகு சொல்லுகிறான், பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன் (தானி 4:35) என்பதாக. ஆண்டவர் அவர் சித்தத்தின்படி இந்த வருடத்தில் உங்களை நடத்தியிருக்கிறார். அதற்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவரை மகிமைப்படுத்துங்கள். அப்பொழுது உங்களுக்கு கிருபை பெருகும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *