எரே 1:5. நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NGLmd2Opfmk
ஆதாம், ஏவாள் மற்றும் மெல்கிசேதேக்கை தவிர மற்றெல்லாரும் இவ்வுலகில் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இரண்டு பிறந்த நாட்கள் உண்டு. தாயின் கருவில் நாம் பிறக்கும்போது பாவத்தில் பிறக்கிறோம். இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மூழ்கி ஞானஸ்நானம் பெறும்போது மறுபடியும் பிறக்கிறோம். நம்மை ஜெநிப்பித்த கன்மலை தேவனாய் காணப்படுகிறார் (உபா 32:18) என்று வசனம் கூறுகிறது. நாம் தாயின் கருவில் உருவாகுமுன்னே கர்த்தர் நம்மை முன்குறித்தார். சிம்சோனை தாயின் கருவில் இருக்கும்போதே அவன் நசரேயனாக இருப்பான் என்று முன்குறித்தார். பவுல் தன்னை குறித்து சொல்லும்போது நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன் (கலா 1:15) என்று கூறுகிறார். இப்படி நம்மை ஜெநிப்பித்தது மாத்திரமல்ல இந்த வருடத்தில் மீண்டும் நம்முடைய பிறந்தநாளை காணும்படி செய்த தேவனுக்கு நன்றி சொல்லுகிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும்.
தாயின் கருவில் உருவானதுமுதல் நல்ல தோற்றத்தை கொடுத்து, உடல் உறுப்புகள் எல்லாம் சரியாக இயங்கும்படி செய்த தேவனுக்கு நன்றி கூறுவோம். என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன் என்று தாவீது கர்த்தரை துதிக்கிறார். கர்த்தர் நமக்கு கொடுத்த கண்களுக்கு நிகரான கேமரா இந்த உலகில் இல்லை. அவர் நமக்கு கொடுத்த மூளைக்கு நிகரான கம்ப்யூட்டர் இல்லை. அதுபோல அவர் நமக்கு கொடுத்த இருதயம் போல தொடர்ந்து இயங்கும் இயந்திரம் ஒன்றும் இல்லை. இப்படி பிரமிக்கத்தக்கவண்ணமாக கர்த்தர் நம்மை உருவாக்கினார். இந்த வருடத்தில் பிறந்தநாட்களை காணும்படி செய்ததுமாத்திரமல்ல, இதுவரைக்கும் பாதுகாத்துவந்த தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த வருடத்தில் விமானத்தில் பயணம் செய்தபோதும், இரயிலில் பயணம் செய்தபோதும், எண்ணமுடியாத அளவிற்கு பேருந்து, வாகனம், பைக்கில் பயணம் செய்தபோதும், கர்த்தரே உங்களை பாதுகாத்தார். எத்தனைமுறை நாம் வாகனங்களில், பைக்கில் பயணம் செய்தோம் என்பதை நாம் அறியோம். ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நம்முடைய உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். நம்முடைய தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியையும் எண்ணி வைத்திருக்கிறார். அவரே நம்முடைய பிரயாணங்களை ஆசிர்வதித்தார், பாதுகாத்தார். வருடத்தை நன்மையால் முடிசூட்டினார். இந்த ஆண்டில் கர்த்தர் பாராட்டின இரகத்திற்காகவும், அன்பிற்காகவும் நன்றி செலுத்துங்கள். இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் அவருடைய கிருபை உங்களுக்கு புதிதாயிருந்தது. அவர் எதிர்பார்த்த கீழ்ப்படிதல், பரிசுத்தமான வாழ்வும் இல்லாதபோதும், மன்னியும் என்று ஒரு வார்த்தை சொன்னபோதெல்லாம், அவருடைய இரத்தத்தால் கழுவினார். அதனால் ஆண்டவருக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar