கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது (சங். 105:19).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2YguecZukpQ
யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். யாக்கோபின் முதிர்வயதிலே அவன் அதிகமாய் நேசித்த ராகேலுக்கு யோசேப்பு பிறந்ததினாலே தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். அதினிமித்தம் அவன் சகோதரர் அவனை பகைத்தார்கள். மேலும் யோசேப்பு ஒரு சொப்பனத்தைக் கண்டு அதை தன் சகோதரர்களுக்கு அறிவித்தான். அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம், அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது, உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன், சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.
யோசேப்பு கண்ட தரிசனங்கள் அவனுடைய வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு பதிமூன்று வருடங்கள் ஆனது. இடைப்பட்ட இந்த வருடங்களில் அவன் கடந்து சென்ற பாடுகளின் பாதையை விவரிக்க முடியாது. அவனுடைய சகோதரர்களால் குழியில் தூக்கிப் போடப்பட்டான், பின்பு இஸ்மவேலர்களுக்கு இருபது வெள்ளிக்காசுக்காக அவர்கள் அவனை அடிமையாய் விற்றுப் போட்டார்கள். இஸ்மவேலர்கள் பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபாருக்கு யோசேப்பை விற்றுப் போட்டார்கள். அதன்பின்பு, போத்திபாரின் மனைவியின் இச்சைகளுக்கு இணங்காததின் நிமித்தம் பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலையில் போடப்பட்டான். கர்த்தர் சொன்ன வார்த்தை அவனுடைய வாழ்க்கையில் நிறைவேறுமளவும் இப்படிப் பல பாடுகளை அவன் சகிக்கவேண்டியிருந்தது. ஆனால் கடைசியில் கர்த்தருடைய வார்த்தையின் படி எகிப்தில் பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தப்பட்டு எகிப்தின் அதிபதியாய் உயர்த்தப்பட்டான். அவனுடைய பெற்றோர்களும் சகோதரர்களும் வந்து அவனை வணங்கினார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் நிறைவேறும். நீங்கள் வேதத்தை வாசிக்கும் போது, கர்த்தர் உங்களோடு பேசின ஒவ்வொரு வார்த்தைகளும் நிறைவேறும். தாவீதுக்கு தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றின தேவன், உங்களுக்கு அருளின் ஒவ்வொரு வார்த்தைகளையும் துரிதமாய் நிறைவேற்றுவார். ஆகையால் இக்காலத்துப் பாடுகளையும், துக்கங்களையும் கண்டு சோர்ந்து போகாதிருங்கள், உற்சாக மனதோடு கர்த்தரைச் சேவியுங்கள். உங்கள் வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலின் காலம் வந்தாகிவிட்டது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae