மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 54:10).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fFiSb0oh85c
கர்த்தருடைய பிள்ளைகள் மேல் ஆண்டவர் வைத்த கிருபையும், இரக்கமும், தயவும் ஒருநாளும் விலகாது. நீங்கள் அவருடைய அன்பிற்குள்ளாய் காணப்பட்டு, அவருடைய சித்தத்தின் மையத்தில் வாழும் போது அவருடைய கிருபை உங்களைச் சூழ்ந்து கொள்ளும். அந்த கிருபை உங்களை வாழவைக்கும், உங்களை உயர்த்தும். ஒருநாள் கர்த்தர் தாவீதைப் பார்த்து, உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல உன்னைவிட்டு விலக்கமாட்டேன் என்ற வாக்குக் கொடுத்தார்(2 சாமு. 7:15). உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும், உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்றார். அதுபோல கர்த்தருடைய கிருபை உங்களை விட்டு ஒருநாளும் விலகாது என்று கர்த்தர் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறார்.
சவுலும் அவனுடைய குடும்பமும் கர்த்தருடைய கிருபையை இழந்து போனார்கள். கழுதைகளைத் தேடிப் போனவனைக் கர்த்தர் கிருபையாய் தெரிந்தெடுத்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய சுதந்திரத்தின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். ஆவியானவர் சவுலின் மேல் இறங்கி, அவனை வேறு மனுஷனாய் மாற்றினார். ஆகிலும் சாமுவேல் தீர்க்கதரிசியின் வருகைக்குக் காத்திராமல் அவர் செலுத்த வேண்டிய பலிகளை இவன் துணிந்து செலுத்தி கர்த்தர் விதித்த கட்டளையை கைக்கொள்ளாமற்போனான். அதுபோல இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையைக் கர்த்தர் மனதிலே வைத்திருந்தார். சுமார் ஐந்நூறு வருடங்கள் கழித்து சவலை ராஜாவாக்கியவுடன், நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்று சொன்னார். ஆனால் சவுலும் ஜனங்களும், அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவற்றையும், இரண்டாந்தரமானவற்றையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து கர்த்தருடைய கட்டளையை மீறினார்கள். உடனே கர்த்தர் நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது, அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார். கடைசியில் பெலிஸ்தியர்கள் சவுலையும் அவன் குமாரரையும் வெட்டிப்போட்டார்கள், அவர்கள் கையில் மரிப்பதற்குப் பதிலாகச் சவுல் தன் பட்டயத்தை நிறுத்தி அதின்மேல் விழுந்து மரித்துப் போனான். இப்படியாகச் சவுலும் அவனுடைய குடும்பமும் கர்த்தருடைய கிருபையை இழந்து போனது. கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய சத்தத்திற்கு எப்பொழுதும் கீழ்ப்படியுங்கள், அவர் செய்யும்படிக்குச் சொல்லுவதைச் செய்யுங்கள். சவுலைப் போலக் கர்த்தருடைய கிருபையை இழந்துபோகிற பாத்திரங்களாய் காணப்படாதிருங்கள்.
கர்த்தர் தாவீதுக்கு என் கிருபையை உன்னைவிட்டு விலக்கமாட்டேன் என்று வாக்கு கொடுத்தபடியே செய்தார். யூதாவில் கடைசியாகத் தோன்றின நான்கு ராஜாக்கள் யோவகாஸ், யோயாக்கீம், யோயாக்கீன், சிதேக்கியா ஆகியவர்கள் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் எச்சரித்தும் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடாமல் போனார்கள். ஆகையால் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு தாவீதின் சிங்காசனத்திற்கு முடிவு வந்தது, கர்த்தருடைய வார்த்தை தோற்றுப் போனது என்பதாகச் சத்துரு எண்ணிக் களிகூர்ந்து கொண்டிருநத வேளையில், இயேசு தாவீதின் குமாரனாகப் பிறந்தார். அவருடைய சிங்காசனம் என்றும் நிலையானது. அவருடைய ராஜ்யத்திற்கு ஒரு நாளும் முடிவில்லை. இயேசு யுதா கோத்திரத்து சிங்கமாய், தாவீதின் வேராய் தோன்றினதாலே தாவீதின் சிங்காசனம் நிலைபெற்றது. தாவீதும் அனேக மீறுதல்களையும், பாவங்களையும் செய்திருந்தாலும், அவன் பாவ அறிக்கையிட்டு கர்த்தரோடு ஒப்புரவாகியதின் நிமித்தம் கர்த்தர் அவன் மேல் வைத்த கிருபையை எடுத்துப் போடவில்லை. தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாய் கண்டேன், அவன் எனக்குச் சித்தமானதையெல்லாம் செய்வான் என்று கர்த்தர் கூறினார். அவன் காலத்தில் தாவீது தேவசித்தத்தின் படி கர்த்தருக்கு ஊழியம் செய்தான் என்றும் வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்களும் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவருடைய சித்தத்தின் மையத்தில் வாழும் போது, கர்த்தர் உங்கள் மேல் கொண்ட அன்பும், கிருபையும், இரக்கமும் ஒருநாளும் உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் விட்டு விலகுவதில்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae