அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள் (லூக்கா 1:34).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7YaKzPZguuQ
காபிரியேல் தூதன், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த கன்னிகையாகிய மரியாளிடத்தில் வந்து, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று கூறினான். அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார், அவருடைய ராஜ்யத்துக்கு முடி விராது என்றான். அதற்கு மரியாள் மிகவும் ஆச்சரியத்தோடும், பயத்தோடும் இது எப்படியாகும்? புருஷனை அறியாத கன்னிகை நான் என்றாள். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு சகரியாவிடம் காபிரியேல் தூதன் சென்று இப்படிப்பட்ட ஒரு செய்தியைச் சொன்னபோது, அவனும் தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன், நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான். அவனுக்கும் வயோதிபத்தின் நிமித்தம் கர்த்தருடைய வார்த்தையை நம்பமுடியவில்லை. ஒருநாள் மம்ரேயின் சமபூமியிலே ஆபிரகாமுக்குக் கர்த்தர் தரிசனமானார். அவன் பகலிலே உஷ்ண வேளையில் கூடார வாசலிலே உட்கார்ந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள். அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன், அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடார வாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள், ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன். அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். கர்த்தருடைய வார்த்தையின் படியே மூன்று பேருக்கும் அற்புதம் நடந்தது.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்குக் கடினமாய் தோன்றுகிற காரியங்கள் எல்லாம் தேவனுக்கு லேசானது. மனுஷனால் கூடாதவைகள் எல்லாம் தேவனால் கூடும். மருத்துவத்தினாலும் மருத்துவர்களாலும் கூடாதவைகள் இயேசுவால் ஆகும். நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளார். அவர் சொல்ல எல்லாம் ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். இனி என்னுடைய வாழ்க்கையில் ஒரு நன்மை உண்டாகுமா? என் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வு துளிர்க்குமா? என் எதிர்காலம் எப்படிப்பட்டதாயிருக்கும். புதிய வேலை எனக்குக் கிடைக்குமா? எனக்கு திருமணம் நடக்குமா? என் கற்பத்தில் ஒரு கனி இனி உண்டாகுமா? ஊழியத்தின் பாதையில் விசாலம் உண்டாகுமா? இப்படிப்பட்ட பல கேள்விகள் உங்களுக்குள்ளாய் காணப்படலாம். தேவனால் கூடாதவைகள் ஒன்றுமில்லை. காண்கிறவைகள் எல்லாம் அவருடைய வார்த்தையால் உண்டானது. ஒருநாளும் கர்த்தருடைய வல்லமையை மட்டுப்படுத்தி விடாதிருங்கள். உங்களுக்குக் கர்த்தர் ஒரு அற்புதத்தைச் செய்து உங்களை மகிழப்பண்ணுகிற வேளை வந்தாகிவிட்டது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae