ஏசா 55:6. கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dR5ee1WdjMI
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த குல்ஷான் பாத்திமா என்றழைக்கப்படும் குல்ஷான் எஸ்தர் தன் சிறு வயதிலிருந்து முடமாக இருந்தார். அவர்கள் நமஸ்கரிக்கும் கடவுள் அவர்களுக்கு அற்புதம் செய்யவில்லை. எல்லா மருத்துவமனைகளும் அவர்களை கைவிட்டுவிட்டது. காலப்போக்கில் அவர்களை பராமரித்துவந்த அவர்களுடைய தாயும் தகப்பனும் இந்த உலகத்தை விட்டு கடந்து சென்றார்கள். முடமாக இருக்கும் அவர்கள் எல்லாரையும் விட்டு பிரிந்து துக்கத்தில், ஒருநாள் இரவு கதவை மூடி அவர்களுடைய நூலை எடுத்து வாசித்தார். அவற்றில் இயேசுவை குறித்ததான ஒரு வசனத்தை அவர்கள் வாசித்தார்கள். இயேசு முடவர்கள் நடக்கும்படி செய்தார், குருடர்கள் பார்வையடையும்படி செய்தார், செவிடர்கள் கேட்கும்படி செய்தார் என்ற வசனத்தை படித்தார்கள். அப்பொழுது தான் அவர்கள் தங்களுக்குள் ஒரு கேள்வியை கேட்டார்கள் என்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிற இந்த இயேசு யார் என்பதாக. அப்பொழுது அவர்கள் இயேசுவை நோக்கி ஜெபித்தார்கள். இயேசுவே நீர் தான் மெய்யான தெய்வம் என்றால், நீர் என்னை குணமாகும் என்பதாக. அப்பொழுது இயேசு அவர்கள் முன்பாக பிரசன்னமாகி தன்னுடைய காயப்பட்ட கரத்தை காண்பித்து, நீ தேடின இயேசு நானே, இன்று நான் உன்னை குணமாக்குகிறேன் என்று சொல்லி, பதினெட்டு வருசமாக முடமாக இருந்த அந்த பெண்மணி எழுந்து நடக்கும்படி அற்புதம் செய்தார். அப்பொழுது இயேசு சொன்னார், என்னை குறித்து இன்னும் அறியவேண்டுமேன்றால் ஒரு குறிப்பிட்ட தெருவில் ஒருவர் வேதாகமத்தை வைத்திருக்கிறார். அவரிடம் போய் அந்த வேதாகமத்தை வாங்கி படி, அவற்றிலிருந்து நீ என்னை அறிந்துகொள்ளலாம் என்பதாக. அன்றிலிருந்து அவர்கள் வேதத்தை அதிகமாய் நேசித்து, வாசித்து, இயேசுவை கண்டுகொண்டார்கள்.
தேவ ஜனங்களே, நாம் யெகோவா தேவனை அறிந்துகொள்ளுவதற்கு ஒரே வழி, பரிசுத்த வேதாகமம் மாத்திரமே. தினமும் வேதாகமத்தை திறந்து வாசிக்கும்போது, அவற்றிலிருந்து வாக்குத்தத்தை தெரிந்துகொள்ள நடு பக்கத்தை எடுக்கிறரவர்களாக இல்லாமல், வேதத்தில் இயேசுவை குறித்து அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரம் வேதத்தை படியுங்கள். யூதர்கள் பழைய ஏற்பாடு புஸ்தகங்களை வாசித்து, தியானித்து, மனனம் செய்தும், அந்த 39 புஸ்தகங்களும் சுட்டிக்காட்டும் நபராகிய இயேசுகிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்ள தவறிவிட்டார்கள். A.W டோசர் என்ற தேவ மனிதர் சொன்னார், தேவனின் வேதத்தை அறிவதை விட, வேதத்தின் தேவனை அறிவதே அவசியம் என்பதாக. பரிசுத்தரை அறியும் அறிவே அறிவு என்று நீதி 9:10 கூறுகிறது. ஆகையால் களங்கமில்லாத ஞானபாலின் மேல் அதிகமாய் வாஞ்சையாய் இருங்கள். வேதாகமத்தில் ஒவ்வொரு பக்கங்களிலும் இயேசு காணப்படுகிறார். கண்டடையத்தக்க சமயத்தில் அவரை வேத புத்தகத்தில் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை வேதாகமத்தின் வசனத்தின்படி நோக்கிக் கூப்பிடுங்கள். உங்கள் ஜெபங்களெல்லாம், வீண் வார்த்தைகளால் அலட்டாமல், அதிகமாக வேத வசனத்தின்படி இருக்கட்டும். வசன எழுப்புதல் உங்கள் ஒவ்வொருக்குள்ளாகவும் வரட்டும். அப்பொழுது அந்த வசனம் உங்களை வாழவைக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org