பெயரெழுதப்பட்டவர்கள் (Those whose names are written).

எஸ்றா 2:64. சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6-b9ornLMNk

எஸ்றா புஸ்தகத்தில் முதல் இரண்டு அதிகாரங்களில் செருபாபேலின் தலைமையின் கீழ் பாபிலோனிலிருந்து எருசலேமிற்கு பிரயாணம் செய்ததை குறித்தும், 3 – 6 அதிகாரங்களில் தேவாலயத்தின் கட்டுமான பணிகளை குறித்தும், 7 – 10 அதிகாரங்களில் எஸ்றாவின் தலைமையின் கீழ் சீர்திருத்தம் உண்டாகிறதையும் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது.

எஸ்றா இரண்டாம் அதிகாரத்தில் யார் யாரெல்லாம் பாபிலோனிலிருந்து எருசலேமிற்கு கடந்து சென்றார்கள் என்பதை பற்றியதான புள்ளி விவரமும், அவர்களுடைய பெயர்களும் கூட வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எவ்வளவு ஆச்சரியம் ஆவியானவர் குறிப்பாக பெயர்களையும் வம்சங்களையும் பட்டியலிட்டிருப்பது!. நாமெல்லாரையும் தன்னுடைய உள்ளங்கையில் கர்த்தர் வரைந்து வைத்திருக்கிறார். அதுபோல நம் பெயர்களையும் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைக்கிறவர்.

அநேகருக்கு தங்கள் பெயர் பத்திரிக்கைகளில் வர வேண்டும் என்று விருப்பப்படுவார்கள், விளம்பர பலகைகளில் தங்கள் பெயர்கள் வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள், பெயர்களோடு தங்கள் பட்டங்களும் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள், ஊழியக்காரர்கள் கூட தங்கள் பெயர்களோடு பிஷப், டாக்டர், ரெவெரென்ட் போன்ற பட்டங்களை போட்டுக்கொள்ள வாஞ்சிப்பார்கள். தேவ ஜனங்களே, இவைகளெல்லாவற்றையும் விட, நம்முடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பாபிலோனில் இருந்து எருசலேமிற்கு கடந்து சென்றவர்களின் பெயர்களை எப்படி ஆண்டவர் சரியாக எழுதி வைத்திருக்கிறாரோ, அதுபோல இன்றும் பாபிலோனிய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு வருகிறவர்களின் பெயர்களை ஆண்டவர் தன்னுடைய குறிப்பில் எழுதி வைக்கிறார் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

பாபிலோனிய வாழ்க்கை என்பது வசதியான இடம். எருசலேமிற்கு கடந்து சென்று அங்கே கஷ்டப்படுவதை பார்க்கிலும் பாபிலோனிலேயே தங்கி விடுவது தான் அநேக ஜனங்களின் விருப்பமாக இருந்தது. லேவி கோத்திரத்திற்கும் அதே விருப்பம் தான் காணப்பட்டது. லேவி கோத்திரத்திலிருந்து 74 பேர்கள் மாத்திரமே எருசலேமிற்கு கடந்து சென்றார்கள் (2:40). ஏன் இவ்வளவு சொற்ப ஜனங்கள் லேவி கோத்திரத்திலிருந்து கடந்து சென்றார்கள். காரணம் பாபிலோனில் சொகுசானா வாழ்க்கை, நல்ல வருமானம், நல்ல இடம், நல்ல சுகமான வாழ்க்கை. இடிந்து போன எருசலேமிற்கு கடந்து செல்ல பயண களைப்பு வரும், அதிகமான செலவு செய்ய வேண்டும், வருமானத்திற்கு வழி தெரியவில்லை. இப்படி பல கேள்விகளோடு பெரும்பான்மையினர் பாபிலோனிலேயே தங்கிவிட்டார்கள். தங்களது வசதியை பொருட்டாக எண்ணாமல், கர்த்தருடைய ஆலயத்தை கட்ட வேண்டும் என்று எருசலேமிற்கு கடந்து சென்றவர்களின் பெயர் வேதாகமத்தில் எழுதப்பட்டது. மற்றவர்களின் பெயர் வேதாகமத்தில் எழுதப்படவில்லை.

இன்றும் அநேக விசுவாசிகள், நான் உண்டு, என் வேலை உண்டு, என் சொத்து உண்டு, என் சேமிப்பு உண்டு என்று மாத்திரம் சிந்தித்து, தேவாலயத்தை குறித்து கரிசனை இல்லாமல் இருப்பதைவிட, தேவாலயத்தை குறித்து தரிசன பார்வையோடு செயல்படுவீர்களென்றால், உங்கள் பெயரை கர்த்தர் தன்னுடைய புஸ்தகத்தில் எழுதிவைத்து, அதற்கு தக்க பலனை உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *