பச்சையான ஒலிவமரம் (Green Olive Tree).

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான  ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன்,    தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்(சங்;. 52:8).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/eR1s_mJJG_Y

தாவீது தன்னை ஒரு பச்சையான ஒலிவமரத்தோடு  ஒப்பிடுகிறதைக் குறித்து பார்க்கமுடிகிறது. அதுவும் தேவனுடைய ஆலயத்தில் காணப்படுகிற பச்சையான ஒலிவமரமாய் தன்னைப் பார்க்கிறான். ஒலிவமரம் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழக்கூடிய மரங்களில் ஒன்றாகும். அதன் பச்சை என்பது செழுமையையும்,    ஆசீர்வாதத்தையும் குறிக்கிறது. வேதம் முழுவதும் ஒலிவ மரத்தைக் குறித்து அனேக காரியங்கள் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் சங்கீதக்காரனைப் போல் கர்த்தருடைய ஆலயத்தின் மேல் வாஞ்சையாயிருங்கள்,    ஒரு பச்சையான  ஒலிவமரமாய் கர்த்தருடைய ஆலயத்தில் காணப்பட உங்களை அர்ப்பணியுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து,    அவருடைய ஆலயத்திலே நாட்டப்பட்ட உங்களை,    வெளி உலகில் செழித்திருக்கும் படிக்குச் செய்வார். அவருடைய  ஆலயத்தின் நன்மையினால்   உங்களைத் திருப்தியாய் ஆசீர்வதிப்பார்.

ஐம்பத்திரண்டாவது சங்கீதம் தாவீது அபிமெலேக்கின் வீட்டுக்கு வந்தானென்று ஏதோமியனாகிய தோவேக்கு சவுலுக்கு அறிவித்த பின்பு தாவீது பாடின பாடலாகக் காணப்படுகிறது. ஆசாரியனாகிய  அபிமெலேக்கு தாவீதுக்காக  கர்த்தரிடத்தில் விசாரித்து,    அவனுக்கு வழிக்குப் போஜனத்தைக் கொடுத்து,    பெலிஸ்தனாகிய  கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்று தோவேக்கு சவுலுக்கு அறிவித்தான். அதினிமித்தம் சவுல் ஆசாரியனை அழைத்தனுப்பி,    அவன் தன் எதிரியாகிய  தாவீதுக்கு உதவிசெய்ததின் நிமித்தம்,    அவனையும் அவனோடு காணப்பட்ட சணல் நூல் ஏபோத்தை தரித்திருந்த  எண்பத்திஐந்து ஆசாரியர்களையும் கொல்லுங்கள் என்று தன் சேவகருக்குக் கட்டளையிட்டான். ஆனால்,    ராஜாவின் சேவகரோ,    கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை  நீட்டச் சம்மதிக்கவில்லை. ஆகையால்,    ராஜா  புறஜாதியானாகிய ஏதோமிய வம்சத்தைச் சேர்ந்த தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்று போடு என்றான்,    அவன் ஆசாரியர்கள்மேல் விழுந்து,    சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்து பேரையும் ஈவு இரக்கமின்றி அன்றையதினம் கொன்றான். ஆகையால் தான் தாவீது பலவானாகிய தோவேக்கே நீ ஏன்; பொல்லாப்பில் பெருமை பாராட்டுகிறாய்,     கேடுகள் செய்வதையும் பொய்யையும் விரும்புகிற உன்னை,    கர்த்தர் அழித்து,    நிர்மூலமாக்கி,    பிடுங்கிப் போடுவார் என்றான். கர்த்தருடைய கிருபையை நம்பியிருக்கிற நானோ,    பச்சையான  ஒலிவமரத்தைப் போலிருந்து,    வாழ்ந்திருப்பேன் என்று தாவீது பாடினான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    பொல்லாத பிசாசு,    உங்களுக்கு விரோதமாக பொல்லாதவர்களையும்,    துன்மார்க்கர்களையும் ஏவிவிடக் கூடும். அவர்கள் பலத்தவர்களாகவும்,    அகந்தையோடு ஜீவிக்கிறவர்களாகவும் காணப்படலாம். அவர்கள் உங்களைப்  பலவிதங்களில் நெருக்கவும் கூடும். ஆனால் நம்முடைய யுத்தம் மாம்சத்தோடும்,    இரத்தத்தோடும் அல்ல. நீங்கள் கர்த்தருடைய கிருபையை நம்பி அதைச் சார்ந்துகொள்ளுங்கள். கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்ட ஒரு பச்சையான ஒலிவ மரத்தைப்  போலக் காணப்படுங்கள். ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும் அவருடைய ஆலயத்தின் பிரகாரங்களில் கடந்து செல்லுகிற ஒரு நாளை மேன்மையாகக் கருதுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.  நீங்களும் உங்கள் சந்ததிகளும் தலைமுறை தலைமுறையாகப் பசுமையாய் வாழ்ந்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *