ஆலய பிரதிஷ்டை விழா (Dedication of the house of God).

எஸ்றா 6:15,16. ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dtmCA_ZRcTY

கர்த்தருடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கு முன்பாக, தரியு ராஜாவின் மூலம் ஒரு செய்தி வருகிறது. தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள். தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும் (6:7,8) என்பதாக.

தரியு இராஜாவானவர், யூதர்கள் ஆண்டவருக்கு கட்டும் ஆலயத்தை தடுப்பார் என்று நினைத்த எதிரிகளுக்கு, எதிர்பாராத செய்தி வந்தது. தரியு இராஜா சொன்னான், கோரேசு இராஜாவின் ஆணையின்படி இந்த தேவனுடைய ஆலயத்தை அவர்கள் கட்டட்டும். அவர்கள் கட்டுவது மாத்திரமல்ல அதற்கு தேவையான பொருள்களை, செல்லும் செலவை ராஜாவின் திரவியத்திலே, அதாவது, தன்னுடைய அரசாங்கத்திலிருந்து அவர்களுக்குத் தாமதமில்லாமல் கொடுங்கள் என்று தரியு ராஜா கட்டளையிட்டான். சில வேளைகளில் நாம் நினைப்பதுண்டு, தேவனுடைய ஆலயத்தை கட்ட பல தலைவர்கள் ஏன் எதிராக நிற்கிறார்கள், உலகத்தில் பல இடங்களில் சபைகள் கட்டப்படுவதற்கு பதிலாக தாக்கப்படுகிறதே என்பதாக. தேவ ஜனங்கள் ஒரு காரியத்தை அறிந்துகொள்ள வேண்டும். எப்படி, ஏன் தரியு ராஜா, ஆலயத்தை கட்ட சம்மதம் தெரிவித்தான்? காரணம் என்னவென்றால் தரியு அரசாண்ட காலத்தில் அவனுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் தானியேல் என்ற ஜெப வீரன். நம்முடைய தேவன் தீமையையும் நன்மையாக மாற்றி போடுகிறவர். தானியேலின் தெய்வீக ஆலோசனையினிமித்தமே தரியு ராஜா ஆலயத்திற்கு வேண்டிய உதவிகளை தாமதமில்லாமல் செய்ய முன் வந்தான்.

இன்றும் ஆளுகிற தலைவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கும் தானியேல்கள் எழும்ப வேண்டும். ஒரு ஊழியக்காரர் சொன்னார் தானியேலை போல தைரியமுள்ளவர்களாக இருங்கள் என்பதாக. ஆங்கிலத்தில் ஒரு பிரசித்த பெற்ற Dare to be a Daniel என்ற பாடலும் உண்டு. ராஜாவை தவிர யாரையும் சேவிக்க கூடாது என்ற சட்டமும், மீறினால் அவர்களை சிங்க கெபியில் போட வேண்டும் என்றும் ராஜாவால் தீர்மானம் போட்டபோதும், தானியேல் தன்னுடைய தேவனை தேடவும், அவரை நோக்கி ஜெபம் செய்யவும் தவறவில்லை. இப்படிப்பட்ட ஜெப வீரர்கள், அதிகாரமிக்க இடங்களில் வேலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் நல்ல ஆலோசனைகளை தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நாம் ஜெபிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.

இறுதியில், ஆலயம் தேவன் விரும்பியவண்ணம் கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார் (எஸ்றா 6:22). ஆரம்பம் அற்பமானாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும் என்ற வசனத்தின்படி, ஆலயம் சம்பூரணமாய் கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இஸ்ரவேலர்கள் எல்லாரும் மகிழ்ந்து சந்தோசமாய் ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணினார்கள். நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கென்று எடுக்கிற முயற்சிகளையும், கர்த்தர் வாய்க்க செய்து, அந்த ஆலயத்தை பிரதிஷ்டை செய்யும்படி, அவருடைய கரங்களே செய்யும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *