ஆகையால், ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும் படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்(1 பேதுரு 5:6).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1FdIGCC99TM
கர்த்தர் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தையும் சமயத்தையும் வைத்திருக்கிறார். அவருடைய வேளையில் அவருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நன்மையானதை செய்வார். அவரை துரிதப்படுத்தவும் முடியாது, காலதாமதப்படுத்தவும் முடியாது. ஆகையால் அவர் உங்களை உயர்த்தும் வேளை வரைக்கும் அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள். துரிதமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாம் துரிதமாய் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆகையால் வாழ்க்கையில் உயருவதற்குக் குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறோம். அவைகளால் வரும் நன்மைகள் நிலைத்து நிற்பதில்லை.
யோசுவா இஸ்ரவேல் ஜனங்களைக் கானானுக்குள் நடத்தி, சுமார் ஏழு வருடங்கள் யுத்தங்கள் செய்து கானானை அவர்களுக்குப் பங்கிட்டான். தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது, என் இருதயத்திலுள்ள படியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன் என்று யோசுவா 14:7ல் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு பின்பு சுமார் நாற்பது வருடங்கள் மோசேக்கு உதவியாளனாய் காணப்பட்டான். கர்த்தர் அவனை உயர்த்துகிற நாள் மட்டும் கர்த்தருடைய கரத்திற்குள் அடங்கியிருந்தான். மோசே மலை உச்சியில் தேவனோடு காணப்பட்ட வேளையில் அவனுக்காகக் காத்திருந்தான், ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலை விட்டுப் பிரியாமல் காணப்பட்டான். கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரனாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு எதிராக எழும்பினான். ஆரோனும், மிரியாமும் மோசேயின் சகோதர சகோதரியாய் காணப்பட்டும் கூட அவனுக்கு விரோதமாய் எழும்பினார்கள். ஆனால் யோசுவா உத்தமாய் மோசேக்கு துணைநின்று உதவி செய்கிறவனாய் காணப்பட்டான். ஆகையால் கர்த்தர் மோசேயின் ஊழியக்காரரான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப் போனான், இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். நான் மோசேக்கு சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை, நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்குக் கொடுத்து அவன் கீர்த்தியைத் தேசமெங்கும் பரம்பச் செய்தார். மோசேயின் குமாரர்களாகிய கெர்சோம் எலியேசர் என்பவர்களுக்கு கிடைக்காத உயர்வைக் கர்த்தர் யோசுவாவுக்கு கொடுத்தார். சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகார், தன் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போன வேளையில், கர்த்தருடைய தூதன் அவளை நோக்கி: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். அவள் திரும்பிச் சென்று அடங்கியிருந்ததினால் கர்த்தர் அவள் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணி, எண்ணிமுடியாததாய் காணப்படும் படிக்கு ஆசீர்வதித்து உயர்த்தினார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களை ஏற்றக் காலத்தில் உயர்த்துவார், அந்த நாட்கள் துரிதமாய் வருகிறது. அதுவரைக்கும் அவருடைய பலத்த கரத்திற்குள் நீங்கள் அடங்கியிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae