குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது, முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது, அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆபகூக் 2:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8aPY7wzSDfI
நம்முடைய வாழ்க்கையில் காத்திருக்குதல் என்பது வாழ்வின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. எல்லாரும் ஒரு கால கட்டத்தில் ஏதாவது ஒரு காரியத்திற்காகக் காத்திருப்பார்கள். சிலர் வேலைகளுக்காகக் காத்திருப்பார்கள், சிலர் வியாதிகளிலிருந்து நிரந்தர விடுதலைக்காய் காத்திருப்பார்கள், சிலர் கர்ப்பத்தின் கனிகளுக்காகக் காத்திருப்பார்கள், சிலர் நல்ல திருமண வாழ்க்கைக்காய் காத்திருப்பார்கள், சிலர் தொழில்களில் முன்னேற்றத்திற்காய் காத்திருப்பார்கள், சிலர் ஊழியத்தில் அடைபட்டுப் போன வாசல்கள் திறக்கும் படிக்காகக் காத்திருப்பார்கள், சிலர் கடன் தொல்லைகளிலிருந்து விடுதலைக்காய் காத்திருப்பார்கள். ஒரு நாள் ஆபகூக் தீர்க்கதரிசி; தேவனைப் பார்த்து அனேக கேள்விகளைக் கேட்டான், நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருப்பீர்? கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருப்பீர்? நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே, பின்னைத் துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? இப்படிப் பல கேள்விகளைக் கேட்ட பின்பு, நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்று கவனித்துப் பார்ப்பேன் என்று கூறிக் காத்திருந்தான். அப்போது கர்த்தர், நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக எழுது. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது, அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் அனேக காரியங்களுக்காகக் காத்திருந்ததின் நிமித்தம், உங்கள் எதிர்பார்ப்புகள் கைகூடி வராததினால் சோர்ந்து போய், பல கேள்விகளைக் கேட்கிறவர்களாய் காணப்படுகிறீர்களா? ஆண்டவர் உங்களைப் பார்த்து கூறுகிறார், தாமதித்தாலும் அதற்குக் காத்திரு என்பதாக. நீங்கள் காத்திருக்கிற காரியத்திற்கு நல்ல ஒரு முடிவு துரிதமாய் வரும். தாவீது கூறினான், நான் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள் (சங். 40:1-3) என்பதாக. அவனைப் போல, கர்த்தருடைய விடுதலைக்காகப் பொறுமையோடு காத்திருக்கிற உங்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்து உங்களையும் துதித்துப் பாடும்படிக்கு கர்த்தர் செய்வார். இந்த புதிய மாதத்தில் உங்கள் காத்திருப்புகளைக் கர்த்தர் கைகூடிவரச் செய்து உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org