எஸ்றா 10:2. அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/sUIXY5LeZec
இஸ்ரவேலுக்கு நம்பிக்கை இருக்கிறது என்ற செக்கனியாவின் நம்பிக்கை இன்று நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 34:8) என்று வசனம் கூறுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய மனைவிகளையும் அவர்களது குழந்தைகளையும் ஒதுக்கி வைப்பதற்கான ஒரு தேவனுக்கேற்ற மற்றும் உறுதியான வாக்குறுதியை செக்கனியா கொடுக்கிறான். இதுபோல நாமும் அநேக நேரங்களில் அந்நிய காரியங்களில், ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களில் தலையிட்டு பாவம் செய்துவிடுகிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு கர்த்தர் சொல்லுகிறார் இன்னும் இஸ்ரவேலுக்கு நம்பிக்கை உண்டு.
ஜனங்கள் எப்படி மனம் திரும்ப வேண்டும் என்ற உயரிய தரத்தை எஸ்றா தன்னுடைய நடக்கை மூலம் செய்துகாட்டினான். இன்று அநேகர் சொல்லுவார்களே தவிர, செய்ய மாட்டார்கள். எஸ்றாவின் ஜெபமும், அழுகையும் ஜனங்கள் மனம் மாறும்படி செய்தது. யோவான் ஸ்நானகன் பிரசங்கித்த முதல் வார்த்தை மனம் திரும்புங்கள். இயேசுவும் பிரசங்கித்த முதல் வார்த்தை மனம் திரும்புங்கள் என்பதே. இயேசு நாம் எல்லாரும் மனம் திரும்ப வாய்ப்புகளை தரும்போது அதை அலட்சியப்படுத்துகிறவர்களாக நாம் காணப்படலாகாது. ஆண்டவர் என்னுடைய பாவத்தை மன்னிப்பாரா, செய்ய தகாததை செய்துவிட்டேன் என்று கலங்கிகொண்டுருக்கிறவர்களுக்கு, கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கட்டும். நான் தாவீதின் இடிந்தபோன கூடாரங்களை எடுத்துக்கட்டுகிறவர் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பிசாசானவன், உங்களை பின்னுக்கு தள்ளுகிறானா, இயேசுவின் மீது உங்கள் நம்பிக்கை குறைந்துபோக அனுமதிக்காதீர்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது (நீதி 23:18) என்று சொன்னவர், உங்கள் நம்பிக்கை வீணாய்ப்போகாமல் பார்த்துக்கொள்ளுவார். உங்கள் பாவங்களை கடலின் ஆழத்தில் போட்டு, அதை நினையாமல் இருப்பார். ஆகையால் இன்னும் கர்த்தருக்காக செயல்பட முன்வாருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org