ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் (2 கொரி. 4:18).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Y65r6XoMX4U
நாம் தெரிந்து கொள்ளும்படிக்கு நமக்கு முன்பாக இரண்டு காரியங்கள் காணப்படுகிறது. ஒன்று பூமிக்குரியது, இன்னொன்று பரலோகத்திற்குரியது. ஒன்று அநித்தியமானது, இன்னொன்று நித்தியமானது. நாம் காண்கிற உலகம், அதில் காணப்படுகிறவைகள், நம்முடைய ஆஸ்தி ஐசுவரியங்கள், வீடு வாசல்கள், குடும்பம், பிள்ளைகள் எல்லாம் தற்காலிகமானது, அநித்தியமானது. இந்த பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அநித்தியமானது. மறுபுறம் நமக்குள் காணப்படுகிற ஆத்துமா நித்தியமானது, பரலோகம் நித்தியமானது, தேவன் நித்தியமானவர், அவருடைய வார்த்தை நித்தியமானது. கர்த்தருடைய பிள்ளைகள் நித்தியமானதை நாடித்தேடி இந்த பூமிக்குரிய வாழ்க்கையை வாழவேண்டும். நம்முடைய எண்ணங்களும் குறிக்கோள்களும் நித்தியமானவைகளை நோக்கி காணப்படவேண்டும்.
ஆபிரகாம் ஒருவனாயிருக்கையில் கர்த்தர் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்துப் பெருகப்பண்ணினார், அவனுடைய ஆஸ்தி ஐசுவரியங்கள் பூமி கொள்ளாததாய் இருந்தது. அப்படியிருந்தும் அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான், ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். ஆபிரகாம் இந்த பூமிக்குரிய காரியங்கள் எல்லாம் நிலையற்றது என்பதை உணர்ந்து, அஸ்திபாரங்களுள்ள நித்தியமான புதிய எருசலேமிற்கு காத்திருந்தான் என்று வேதம் கூறுகிறது. மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். மோசே, பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்பதும், எகிப்தின் பாவசந்தோஷமும் அநித்தியமானது என்பதையறிந்து, இனி வருகிற பலன்கள் தான் நித்தியமானது என்பதை உணர்ந்து, எகிப்தை விட்டு சந்தோஷத்தோடு புறப்பட்டுப் போனான். அதுபோல நாமும் இந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களும், இன்பங்களும் நிரந்தரமற்றவை என்ற உணர்வோடு அனுதினமும் வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
மேலும், கர்த்தருடைய பிள்ளைகள் கடந்து செல்லுகிற உபத்திரவங்களும் பாடுகளும் கூட அநித்தியமானவை. பவுல் இதே வேதபகுதியில் இதைக்குறித்துக் கூறும் போது, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது (2 கொரி. 4:17) என்று எழுதினார். ஆகையால் இக்காலத்துப் பாடுகள் இனிவருகிற மகிமைக்கு ஒப்பானதல்ல. உங்கள் பாடுகளும் உபத்திரவங்களும் முட்களைப் போல உங்களை வேதனைப் படுத்தினாலும், அவைகள் தற்காலிகமானவைகள், அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் என்ற விசுவாசத்தோடு காணப்படுங்கள். அனுதினமும் கர்த்தருடைய கிருபையைச் சார்ந்து, நித்தியத்திற்குரியவைகளை வாஞ்சித்து ஜீவியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

