நினைவுகூருங்கள் (Remember). 

அப்பொழுது நான்: இது என் பலவீனம், ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன் (சங். 77:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OC72RjWFN-s

தாவீதும்,    ஆசாப்பும் பாடல்களை இயற்றுகிறவர்களாகவும்,    இசைக்கருவிகளை வாசிக்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள். சங்கீத புஸ்தகத்தில் ஆசாபின் சங்கீதங்கள் பன்னிரண்டு காணப்படுகிறது.  அவன் குமாரர்களும் கூட ஆராதனை  நடத்துகிறவர்களாகவும்   நல்ல பாடகர்களாகவும்   இசைக்கருவிகளை வாசிக்கிறவர்களாகவும்,   பாடல்களை இயற்றுகிற கவிஞர்களாகவும்,   தீர்க்கதரிசிகளாகவும் காணப்பட்டார்கள். ஆசாபின் ஆவிக்குரிய பிள்ளைகளை இந்நாட்களிலும் திரளாய் சபைகளில் பார்க்கமுடிகிறது. அவர்கள்   பாடுகிறவர்களாகவும்,   இசைக்கருவிகளை வாசிக்கிறவர்களாகவும் மட்டும் இருந்தால் போதாது   தீர்க்கதரிசிகளாயும் எழும்ப வேண்டும்.  ஆசாப்  தன்னுடைய  தாலந்துகள் யாரிடத்திலிருந்து வந்தது என்பதை அறிந்திருந்தான்.   ஆகையால் அவைகளைத் தந்த ஆண்டவரை தன்னுடைய   தாலந்துகளால்  மகிமைப்படுத்தினான். 

இந்த குறிப்பிட்ட சங்கீதத்தில் ஆசாப்பின் இருதயம் கலங்கிப் போய் காணப்படுகிறது. அவனுடைய ஆத்துமாவில் ஆறுதல் இல்லாமல் காணப்பட்டது.  ஆகையால் ஆண்டவரிடம் அனேகக் கேள்விகளைக் கேட்கிறவனாய் காணப்பட்டான். ஆண்டவர்  நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும்  தயைசெய்யாதிருப்பாரோ? அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?  தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்று பலகேள்விகளைக் கேட்கிறான். உடனடியாய் சில காரியங்கள் அவனுடைய நினைவிற்கு வருகிறது. ஆண்டவர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்தான். உடனே அவனுடைய பலவீனமே கர்த்தரிடத்தில் கேள்விகளைக் கேட்க வைத்தது என்பதைப் புரிந்துகொண்டு,    உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்,    கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன்,    உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்,     உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து,    உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்களுடைய வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள் வரும்போது,    ஆண்டவரிடம் கேள்விகள் கேட்காதிருங்கள். யோபு பாடுகள் வழியாய் கடந்து சென்ற வேளையில் அனேகக் கேள்விகளை ஆண்டவரிடம் கேட்டான்,    ஆண்டவர் அவனிடம்  அவருடைய அனந்த ஞானத்தின்படி திருப்பி கேள்வி கேட்ட வேளையில்,    யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக,    இதோ,    நான் நீசன்,    நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்,    என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.  நான் இரண்டொரு தரம் பேசினேன்,    இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்று கூறினான். சில நேரங்களில் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்கிற காரியங்களை நாம் உடனடியாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நாளானது அந்தக் காரியங்களை விளங்கச் செய்யும் போது நமக்கு அது ஆச்சரியமாயிருக்கும். ஆண்டவரிடத்தில் கேள்வி கேட்பதற்குப் பதிலாக உன்னதமானவர் அவருடைய வல்லமையுள்ள கரத்தினால் உங்கள் வாழ்க்கையில் இதுவரைச் செய்த நன்மைகளை நினைவு கூருங்கள்,    இதுவரை நன்மை செய்தவர் இனிமேலும் செய்வார் என்று விசுவாசியுங்கள். கர்த்தருடைய செயல்களையும்,    அதிசயங்களையும் நினைவுகூருங்கள்,    பூர்வ காலத்தில் நம் முற்பிதாக்களுடைய வாழ்க்கையில் செய்த அதிசயங்களை நினைவு கூருங்கள். அவருடைய கிரியைகளையும் செயல்களையும் தியானம் பண்ணி யோசனை செய்யுங்கள். அவைகள் உங்களுக்குள் நம்பிக்கையை உண்டாக்கும். அப்போது உங்கள் சோர்வுகள் உங்களை விட்டு விலகிவிடும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *