விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லையே! (Amazed to see that no one intervened!)

ஏசா 59:16. ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-VeTLxLIvHc

உலகளாவிய கிறிஸ்துவ உலகில் ஜெபத்தை குறித்ததான புஸ்தகங்களே அதிகமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அதிகமான பிரசங்கிமார்கள், அதிகமாக பிரசங்கித்த தலைப்பு ஜெபத்தை அடுத்ததாய் காணப்படுகிறது. அதிகமான விசுவாசிகள் அதிகமாக கேட்கிற பிரசாங்கமும் ஜெபத்தை குறித்ததாய் காணப்படுகிறது. இப்படியிருக்க விண்ணப்பம்பண்ண ஜனங்கள் எழும்பவில்லை என்ற ஆச்சரியம் எங்கும் காணப்படுகிறது.

ஆராதனை பெருவிழா, சுவிசேஷ கூட்டங்கள், அற்புத சுகமளிக்கும் கூட்டங்களுக்கு கடந்து செல்லுகிற திரளான விசுவாசிகள், ஜெபக்கூட்டத்திற்கு வராமல், ஜெப பாரம் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாய் காணப்படுகிறது. எல்லா ஆராதனைகளிலும் உணர்ந்தோ உணராமலோ, பரமண்டல ஜெபத்தை செய்து விட்டு நானும் ஜெபித்து விட்டேன் என்று சொல்லுகிற பரம்பரை கிறிஸ்துவர்களை பார்க்கும் போது ஆச்சரியமாய் காணப்படுகிறது. ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுகிற விசுவாசிகள், ஜனங்களுக்காக திறப்பிலே நின்று ஜெபிக்க தவறி, என் வாழ்க்கை, என் குடும்பம் என்றே சுயநலமுள்ள ஜெபத்தை செய்கிறவர்களை பார்க்கும்போது ஆச்சரியமாய் காணப்படுகிறது. செய்தி தாள்களில் வெளிவருகிற செய்திகளை படித்து அதை தன்னுடைய ஜெபக்குறிப்புகளாக மாற்றி ஜெபிக்க ஆரம்பித்தால், ஆண்டவர் நம்முடைய ஜெபத்தை கேட்டு பதிகொடுக்க வல்லமையுள்ளவர் என்பதை அறியாமல் இருக்கும் விசுவாசிகளை பார்க்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது. ஒரு முறை மாத்திரம் ஜெபித்துவிட்டு கர்த்தர் என் ஜெபத்திற்கு பதில் தரவில்லை என்று சொல்லுகிற ஜனங்களை பார்க்கும் போதும் ஆச்சரியம்.

எலியா நம்மை போல பாடுள்ளமனுஷன். அவன் மழைக்காக கருத்தாய் ஜெபம்பண்ணினான். முதல் முறை ஜெபித்தபோது பதில் வரவில்லை என்பதற்காக எலியா தன் ஜெபத்தில் சோர்ந்துபோனானா? இரண்டாம் முறை அவன் ஜெபித்த பிறகும், மழை வரவில்லை. சுற்றிலும் இருக்கிற ஜனங்கள் ஒருவேளை அவனை கேலி செய்திருப்பார்கள், அவனுக்கு விசுவாச குறைச்சலை உண்டுபண்ணுகிற வார்த்தைகளை பேசி இருப்பார்கள். இருந்தாலும் எலியா சோர்ந்துபோகவில்லை. மீண்டும் மீண்டும் பதிலை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் ஜெபித்தான். இப்படியாக ஏழுமுறை அவன் ஜெபித்தபோது, இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்பியது. எலியாவின் ஜெபத்தை கேட்டு கர்த்தர் மழையை தந்தருளினார். இதுபோல ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டும் என்று கருத்தாய் முப்பது வருஷம் ஜெபித்த ஜெப வீரர்களும், இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது. ஒரு ஊழியக்காரர் சொன்னார், ஜெபிக்கிறவன் ஒருவேளை மரித்துவிடுவான், ஆனால் அவன் ஜெபித்த ஜெபம் மரிப்பதில்லை என்பதாக. அதுபோல, நீங்கள் ஏறெடுக்கிற ஜெபங்கள் ஒருநாளும் மரிப்பதில்லை. அவைகள் அனைத்திற்கும் கர்த்தர் பதில் தருவார். ஆகையால், மன்றாடி ஜெபிப்பதற்கு சோர்வு வராமல், உற்சாகமாக, ஆவியானவர் ஏவுகிறத்தின்படி ஜெபத்தை கூட்டுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *